தூத்துக்குடியில் பயங்கரம்: தலை துண்டித்து திருநங்கை கொடூரக்கொலை கோவில் பூசாரி உள்பட 2 பேர் வெறிச்செயல்


தூத்துக்குடியில் பயங்கரம்: தலை துண்டித்து திருநங்கை கொடூரக்கொலை கோவில் பூசாரி உள்பட 2 பேர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 16 Feb 2019 3:30 AM IST (Updated: 16 Feb 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தலை துண்டித்து திருநங்கை கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கோவில் பூசாரி உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் தலை துண்டித்து திருநங்கை கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கோவில் பூசாரி உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநங்கை

தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கப்புரத்தை சேர்ந்தவர் அந்தோணி பிச்சை. இவரின் மகன் ராஜாமான்சிங் என்ற ராசாத்தி (வயது 38). திருநங்கையான இவர் தாளமுத்துநகர் சுனாமி காலனி பகுதியில் வசித்து வந்தார். மேலும் இவர் தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே முருகன் தியேட்டர் பகுதியில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.

இந்த கோவிலில் இதற்கு முன்பு தூத்துக்குடி பூபால்ராயர்புரத்தை சேர்ந்த பாண்டி மகன் மருது (26) பூசாரியாக இருந்தார். தற்போது ராசாத்தி பூசாரியாக வந்ததில் இருந்து, அவருக்கும், மருதுவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. மேலும், கோவில் திருவிழா நடத்துவது, தசரா விழா கொண்டாடுவது தொடர்பாகவும் இவர்களுக்கு இடையே மோதல் காணப்பட்டது.

இந்த கோவிலில் விரைவில் கொடை விழா நடக்க இருப்பதால் அதற்கான நன்கொடை வசூல் செய்யும் பணியில் ராசாத்தி ஈடுபட்டு வந்தார். இது மருதுவிற்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

தலை துண்டித்து கொலை

நேற்று மாலையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் முன்பு ராசாத்தி நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பூசாரி மருதுவும், அவரது நண்பர் ஒருவரும் சேர்ந்து ராசாத்தியிடம் தகராறு செய்தனர். இது முற்றவே அவர்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் ராசாத்தியை சரமாரியாக வெட்டினர். திடீரென அவரின் தலையை துண்டித்தனர். பின்னர் அந்த தலையை திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் உள்ள ஒரு கோவில் முன்பு வைத்து விட்டு அந்த 2 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

இந்த கொடூரக்கொலை குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர்புற துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ஆல்பர்ட் ஜான், இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன் (வடபாகம்), தங்ககிருஷ்ணன் (தாளமுத்துநகர்), சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, ஞானராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள், ராசாத்தியின் தலை மற்றும் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

திருநங்கைகள் திரண்டனர்

கொலை குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான மருது மற்றும் அவரின் நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருநங்கை கொடூரமாக கொலை செய்யப்பட்டதை அறிந்த அந்த பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

அவர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தலையை துண்டித்து திருநங்கை கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story