மாவட்டத்தில் 9,262 ஏக்கரில் மலர் சாகுபடி கலெக்டர் ரோகிணி தகவல்


மாவட்டத்தில் 9,262 ஏக்கரில் மலர் சாகுபடி கலெக்டர் ரோகிணி தகவல்
x
தினத்தந்தி 16 Feb 2019 4:30 AM IST (Updated: 16 Feb 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 9,262 ஏக்கரில் மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ரோகிணி கூறினார்.

சேலம், 

சேலம் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் மாவட்ட அளவிலான மலர்கள் சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றிய கருத்தரங்கு நேற்று சேலம் தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நடந்தது. கருத்தரங்கை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் நலனுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, அயோத்தியாப்பட்டணம், காடையாம்பட்டி, ஓமலூர், வீரபாண்டி ஆகிய வட்டாரங்களில் அதிக அளவில் மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக மல்லிகை, சாமந்தி, அரளி, ரோஜா, நில சம்பங்கி ஆகிய மலர்கள் திறந்த வெளியில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஏற்காடு வட்டத்தில் பசுமை குடில்கள் அமைத்து ரோஜா, சாமந்தி ஆகிய மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் சுமார் 9,262 ஏக்கரில் பல்வேறு மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம் மூலம் மலர் சாகுபடியை ஊக்கப்படுத்த மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி உதிரி மலர்கள் சாகுபடி செய்ய ரூ.16 ஆயிரம், நில சம்பங்கி போன்ற கிழங்கு வகை மலர்கள் சாகுபடி செய்ய ரூ.60 ஆயிரம் வழங்கப்படுகிறது.

சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. மேலும், விவசாயிகள் தேசிய தோட்டக்கலை இயக்கம், நுண்ணீர் பாசன திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், மானாவாரி நில மேம்பாடு, பயிர் காப்பீடு, கூட்டு பண்ணைய திட்டம் ஆகியவற்றின் மூலம் அரசு வழங்கும் மானிய திட்டங்களை பெற்று பயன் அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கலெக்டர் ரோகிணி மலர்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றிய கையேட்டை விவசாயிகளுக்கு வழங்கினார்.

கருத்தரங்கில் வேளாண்மை இணை இயக்குனர் கமலா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) இந்திராகாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செல்லதுரை, தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் புகழேந்தி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story