கிள்ளை அருகே, குளத்தில் மூழ்கி என்ஜினீயர் சாவு
கிள்ளை அருகே குளத்தில் மூழ்கி என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பரங்கிப்பேட்டை,
சிதம்பரம் வ.ஊ.சி.தெருவை சேர்ந்தவர் குருநாதன். இவருடைய மகன் ராஜேஷ்(வயது 23). என்ஜினீயரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சொந்தஊருக்கு திரும்பினார்.
பின்னர் நேற்று முன்தினம் ராஜேஷ் தனது நண்பர்களுடன் கிள்ளை அருகே கண்டமங்கலத்தில் உள்ள தாமரைக்குளத்துக்கு குளிக்க சென்றார். இதையடுத்து ராஜேசும் அவரது நண்பர்களும் குளத்தில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். இதில் ராஜேஷ் ஆழமான பகுதிக்கு சென்றார். அப்போது அவர் நீச்சல் தெரியாமல் தத்தளித்தவாறு நீரில் மூழ்க தொடங்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், இதுபற்றி அக்கம்பக்கத்தினருக்கு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து நீரில் மூழ்கிய ராஜேசை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேர போராட்டத்துக்கு பின்னர் ராஜேஷ் பிணமாக மீட்கப்பட்டார். இதுபற்றி அறிந்த கிள்ளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story