காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது


காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது
x
தினத்தந்தி 16 Feb 2019 5:15 AM IST (Updated: 16 Feb 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் மண்டியாவை சேர்ந்த துணை ராணுவ வீரரும் பலியாகியுள்ளார். அவர் பற்றிய உருக்கமான தகவல் தெரியவந்துள்ளது.

பெங்களூரு, 

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் மண்டியாவை சேர்ந்த துணை ராணுவ வீரரும் பலியாகியுள்ளார். அவர் பற்றிய உருக்கமான தகவல் தெரியவந்துள்ளது. அவரது உடலுக்கு சொந்த ஊரில் இன்று (சனிக்கிழமை) இறுதிச்சடங்கு நடக்கிறது.

78 வாகனங்களில்...

காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றும் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) 2 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் விடுமுறைக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் விடுமுறை முடிந்த நிலையில் கடந்த 14-ந்தேதி (வியாழக்கிழமை) 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது புலவாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் பஸ்கள் அணி வகுத்து சென்று கொண்டிருந்தன. அப்போது பயங்கரவாதி ஒருவன் சற்றும் எதிர்பாராத நேரத்தில் வெடிகுண்டுகளை நிரப்பிய காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ் மீது மோதினான்.

40 பேர் மரணம்

இதில் கார் வெடித்து சிதறி, வீரர்கள் சென்ற பஸ் முழுவதும் எரிந்து சாம்பலானது. அத்துடன் அருகில் சென்ற பஸ்களும் சேதமடைந்தன. தாக்குதலுக்கு உள்ளான பஸ்சில் பயணம் செய்த வீரர்கள் உடல் சிதறிப்போய் விழுந்தனர். இந்த கொடூர தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்களில் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூர் அருகே குடிகேரி கிராமத்தை சேர்ந்த குரு (வயது 33)என்பவரும் ஒருவர் ஆவார். அவரை பற்றிய உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

ஒண்ணய்யா- சிக்கூலம்மா தம்பதியின் மூத்த மகன் குரு. இவர் 1985-ம் ஆண்டு பிறந்தார். மேலும் அவருக்கு மது மற்றும் ஆனந்த் என்ற 2 சகோதரர்கள் உள்ளனர். ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த குரு கடந்த 2011-ம் ஆண்டு துணை ராணுவப் படையில் பணிக்கு சேர்ந்தார்.

8 மாதத்திற்கு முன்பு திருமணம்

குருவின் பெற்றோர்கள் சலவை கடை வைத்து நடத்தி வருகிறார்கள். மேலும் குருவுக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. அவரது மனைவி பெயர் கலாவதி. கலாவதியின் சொந்த ஊர் ராமநகர் மாவட்டம் கனகப்புரா தாலுகா சாசலாபுரா கிராமம் ஆகும்.

தற்போது குரு ஸ்ரீநகரில் உள்ள 82-வது பட்டாலியனில் பணியாற்றி வந்தார். முன்னதாக அவர் ஜார்கண்டில் உள்ள 94-வது பட்டாலியனில் பணியாற்றினார். குருவின் சம்பளத்தில் தான் அவரது குடும்பம் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் புதியதாக வீடு கட்டி அதில் குரு குடும்பத்தினர் குடியேறியுள்ளனர்.

விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர்

இதற்கிடையே விடுமுறையில் குரு கடந்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். பின்னர் விடுமுறை முடிந்து கடந்த 10-ந்தேதி பணிக்கு புறப்பட்டார். இந்த நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதலில் குரு பலியான சம்பவத்தால் அவரது தந்தை ஒண்ணய்யா, தாய் சிக்கூலம்மா, மனைவி கலாவதி, சகோதரர்கள் மது, ஆனந்த் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர்.

குரு இறந்த செய்தி கேட்டு குடிகேரி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

மந்திரி, எடியூரப்பா ஆறுதல்

இந்த நிலையில் நேற்று காலை குருவின் வீட்டுக்கு மந்திரி டி.சி.தம்மண்ணா, மண்டியா தொகுதி எம்.பி. சிவராமேகவுடா, பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, கலெக்டர் மஞ்சுஸ்ரீ, தாசில்தார் கீதா, ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி ஆகியோர் நேரில் சென்று, குருவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

மேலும் குருவின் வீட்டு அருகே வைக்கப்பட்டு இருந்த அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இன்று இறுதிச்சடங்கு

இதுகுறித்து கலெக்டர் மஞ்சுஸ்ரீ நிருபர்களிடம் கூறியதாவது:-

மரணமடைந்த துணை ராணுவ வீரர் குருவின் உடல் நாளை (அதாவது இன்று) அதிகாலை விமானம் மூலம் கொண்டுவரப்படும் என தெரிகிறது. அவரது உடலை அடக்கம் செய்ய குடிகேரியில் உள்ள இளநீர் மார்க்கெட் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஞ்சலி

மேலும் குருவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து குடிகேரியில் பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அதுபோல் கர்நாடக மாநிலம் முழுவதும் துணை ராணுவ வீரர் குருவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Next Story