தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் மனு: சித்தராமையாவுடன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு


தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் மனு: சித்தராமையாவுடன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 16 Feb 2019 4:30 AM IST (Updated: 16 Feb 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

தகுதி நீக்கம் செய்ய கோரியுள்ள நிலையில் சித்தராமையாவை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திடீரென சந்தித்து பேசினர். தங்கள் மீதான நடவடிக்கையை வாபஸ் பெறுமாறு கோரிக்கை விடுத்தனர்.

பெங்களூரு, 

தகுதி நீக்கம் செய்ய கோரியுள்ள நிலையில் சித்தராமையாவை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திடீரென சந்தித்து பேசினர். தங்கள் மீதான நடவடிக்கையை வாபஸ் பெறுமாறு கோரிக்கை விடுத்தனர்.

ஆபரேஷன் தாமரை

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி பணியாற்றி வருகிறார். இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, புதிய ஆட்சி அமைக்க பா.ஜனதா தீவிர முயற்சி செய்து வருகிறது.

இதற்காக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரம் மூலம் இழுக்க அக்கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, நாகேந்திரா, உமேஷ் யாதவ், மகேஷ் கமடள்ளி ஆகிய 4 பேர் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாயின. மேலும் சில எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரையில் சிக்கியதாக கூறப்பட்டது.

சட்டப்படி நடவடிக்கை

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் கூட்டப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொள்ள தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் கலந்துகொள்ளவில்லை. காங்கிரஸ் அனுப்பிய நோட்டீசுக்கு அவர்கள் 4 பேரும் விளக்கமளித்தனர். இது திருப்தி அளிக்கவில்லை என்று கூறிய காங்கிரஸ் தலைவர்கள், 4 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர்கள் நேரில் ஆஜராகவில்லை.

கட்சி தாவல் தடை சட்டம்

இதற்கிடையே கடந்த 6-ந் தேதி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டணி அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை என்று கூறி பா.ஜனதா சட்டசபையில் தர்ணா போராட்டம் நடத்தியது. இதனால் கூட்டணி அரசுக்கு சிக்கல் எழுந்தது. பட்ஜெட் மசோதாவை நிறைவேற்றுவதில் பிரச்சினை ஏற்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்றும், தவறினால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பப்பட்டது.

தகுதி நீக்கம்

ஆனால் அந்த கூட்டத்தை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் புறக்கணித்த னர். இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, நாகேந்திரா, உமேஷ் ஜாதவ், மகேஷ் கமடள்ளி ஆகிய 4 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி சபாநாயகரிடம் காங்கிரஸ் மனு அளித்தது.

மேலும் குதிரை பேர ஆடியோ உரையாடல் வெளியானதால், பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரையும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் சட்டசபை கூட்டம் நடைபெற்ற கடைசி 2 நாட்களில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திடீரென வந்தனர்.

நேரில் சந்தித்து பேசினர்

இந்த நிலையில் சித்தராமையாவை பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, நாகேந்திரா ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், இனி கட்சிக்கு விசுவாசமாக இருப்பதாகவும், தங்களுக்கு எதிராக சபாநாயகரிடம் வழங்கியுள்ள தகுதி நீக்க நடவடிக்கை மனுவை வாபஸ் பெறுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

அடிக்கடி கட்சிக்கு எதிராக செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய சித்தராமையா, உங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக சித்தராமையா உறுதியளித்தார். மேலும் கட்சியில் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். அதை சரிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Next Story