முன்னாள் சிறைவாசிகளுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி கலெக்டர் ராமன் வழங்கினார்
முன்னாள் சிறைவாசிகளுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவிகளை கலெக்டர் ராமன் வழங்கினார்.
வேலூர்,
வேலூர் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் மற்றும் தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் நலச்சங்கம் ஆகியவை சார்பில் முன்னாள் சிறைவாசிகள் 40 பேருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று வேலூரில் நடந்தது. முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் துணைத்தலைவர் விஜயராகவலு தலைமை தாங்கினார். செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றார்.
இதில் கலெக்டர் ராமன் கலந்துகொண்டு முன்னாள் சிறைவாசிகள் 40 பேருக்கு ஆடு, கறவை மாடு வாங்கவும், கடைகள், உணவு விடுதி நடத்த, கோழி வளர்க்க, பால் வியாபாரம் செய்யவும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.10 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவில் குற்றசெயல்களில் ஈடுபடுபவர்களில் 3-ல் ஒரு பகுதியினர் தான் தண்டனை பெறுகின்றனர். மற்றவர்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக விடுதலை செய்யப்படுகிறார்கள். தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வரும்போது அதற்கான நோக்கம் நிறைவேற வேண்டும். இந்த பூமியைவிட வேறு எங்கும் சொர்க்கம் கிடையாது. எதையும் ஒருநிமிடம் யோசித்தால் குற்றம் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளலாம். இழந்தபின்னர் எதையும் திரும்ப பெறமுடியாது.
சிறைக்கு சென்று வெளியே வருபவர்களுக்கு சமுதாயத்தில் பழைய மரியாதை இருக்காது. ஆனால் அவர்கள் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த உதவிகள் வழங்கப்படுகிறது. சிறையில் பெற்ற அனுபவங்களை வைத்து நீங்கள் நல்ல மனிதராக திருந்தி வாழவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, ஆப்கா இயக்குனர் சந்திரசேகர், வேலூர் கிறிஸ்துவ ஆலோசனை மைய இயக்குனர் பிரசாந்தம், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.வெங்கடசுப்பு, மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story