5 கி.மீட்டர் தூரம் தாறுமாறாக ஓடிய கன்டெய்னர் லாரி மோதி 2 பேர் பலி


5 கி.மீட்டர் தூரம் தாறுமாறாக ஓடிய கன்டெய்னர் லாரி மோதி 2 பேர் பலி
x
தினத்தந்தி 15 Feb 2019 11:00 PM GMT (Updated: 15 Feb 2019 9:31 PM GMT)

கோவை அருகே 5 கிலோ மீட்டர் தூரம் தாறுமாறாக ஓடிய கன்டெய்னர் லாரி 4 வாகனங்கள் மீது மோதியது. இதில் 2 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கர விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சூலூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஒரு கன்டெய்னர் லாரி நேற்று கோவை வந்தது. அந்த லாரி பாப்பம்பட்டியில் உள்ள ஒரு குடோனில் இருந்து பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு நேற்று இரவு 8.30 மணியளவில் அங்கிருந்து கிளம்பியது. அந்த லாரி பாப்பம்பட்டி பிரிவு நோக்கி வந்த போது ஒரு திருப்பத்தில் சாலையோரம் இருந்த கடையின் சுவர் மீது மோதியது. இதை பார்த்த அந்த கடைக்காரரும் அந்த பகுதி மக்களும் சத்தம் போட்டனர். ஆனால் லாரி டிரைவர் நிற்காமல் லாரியை ஓட்டி சென்று விட்டார். இதை கவனித்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் லாரியை துரத்தினார்கள்.

அதன்பிறகு லாரி பாப்பம்பட்டி பிரிவு அருகே வந்தது. அப்போது சாலையோரம் நடந்து சென்றவர் மீது லாரி மோதியது. இதில் அவர் காயம் அடையவில்லை. அப்போதும் அந்த லாரி நிற்காமல் பாப்பம்பட்டி பிரிவில் வலதுபுறம் திரும்பி சூலூரை நோக்கி சென்றது. அப்போது சாலையோரம் நின்ற ஒரு கார் மீது லாரி பக்கவாட்டில் மோதியது. இதில் காரில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. ஆனால் கார் சேதம் அடைந்தது. அதன்பின்னர் டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார்.

அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் அந்த இடத்திலேயே பலியானார். அதன்பின்னர் அந்த லாரி சாலையில் சென்ற மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அதன்பின்னர் அந்த லாரி குமரன் கோட்டம் அருகே வந்த போது எதிரில் வந்த வேன் மீது மோதி அருகில் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது. இதில் வேன் டிரைவர் பலியானார்.

கன்டெய்னர் லாரி ஏறத்தாழ 5 கிலோ மீட்டர் தூரம் தாறுமாறாக ஓடி கடை மற்றும் 4 வாகனங்கள் மீது மோதியதை பார்த்ததும் அந்த பகுதி மக்கள் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் துரத்தினார்கள். குமரன் கோட்டம் அருகே கன்டெய்னர் லாரி மரத்தில் மோதியதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கன்டெய்னர் லாரி தாறுமாறாக ஓடியதால் அதன் டிரைவர் குடிபோதையில் இருந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் அவர் விபத்தில் காயம் அடைந்து மயக்க நிலையில் இருப்பதால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. மேலும் அவருடைய பெயரும் தெரியவில்லை. அவரது ஓட்டுனர் உரிமத்தை வைத்து பெயரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கன்டெய்னர் லாரி மோதியதில் 2 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் இறந்தவர் ஒருவர் ராஜேஷ்கண்ணா (வயது 35) என்றும் அவர் இருசக்கர வாகனத்தில் சென்றவர் என்றும் தெரியவந்தது. ராஜேஷ் கண்ணா சூலூரில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணியாற்றினார். வேலை முடிந்து வெளியே வந்த அவர் இருசக்கர வாகனத்தில் கோவை உக்கடம் காந்தி நகரில் உள்ள வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி பலியானார். விபத்தில் பலியான மற்றொருவர் பெயர் பூபதி (32). இவர் வேன் டிரைவர். கோவையை அடுத்த இருகூர் மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர். 2 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பாலசுப்பிரமணியம் (44), பல்லடத்தை சேர்ந்த சரவணன் (21) என்று தெரியவந்துள்ளது. அவர்கள் சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கன்டெய்னர் லாரி 5 கிலோ மீட்டர் தூரம் தாறுமாறாக ஓடி விபத்து ஏற்படுத்தியதால் கோவை-திருச்சி சாலையில் நேற்று இரவு 8.30 மணி முதல் 12 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கன்டெய்னர் லாரி கிரேன் மூலம் தூக்கி அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தான் அந்த சாலையில் போக்குவரத்து மீண்டும் அனுமதிக்கப்பட்டது. 

Next Story