காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் பலியான மராட்டிய வீரர்கள் 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் மாநில அரசு அறிவிப்பு
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் மராட்டியத்தை சேர்ந்த 2 வீரர்களும் பலியானார்கள். அவர்களது குடும்பத்துக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் மராட்டியத்தை சேர்ந்த 2 வீரர்களும் பலியானார்கள். அவர்களது குடும்பத்துக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.
நிதியுதவி
காஷ்மீர் மாநிலம், புல் வாமா மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் பலியானார்கள். இதில் 2 பேர் மராட்டியத்தின் புல்தானா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் அந்த மாவட்டத்தின் மல்காபூரை சேர்ந்த சஞ்சய் ராஜ்புத், லோனாரை சேர்ந்த நிதின் ரத்தோடு என தெரியவந்தது.
பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பலியான மராட்டியத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் இருவரது குடும்பங்களுக்கும் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.
மும்பை சித்திவிநாயகர் கோவில் அறக்கட்டளையும் ரூ.51 லட்சம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளது.
போராட்டம், அஞ்சலி
இதற்கிடையே, பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து மும்பை உள்பட மாநிலம் முழுவதும் நேற்று போராட்டங்கள் நடந்தன.
வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மராட்டிய தலைமை செயலகமான மந்திராலயாவில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மந்திரி சஞ்சய் ரத்தோடு, தலைமை செயலாளர் தினேஷ்குமார் ஜெயின் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வீரமரணம் அடைந்த துணை ராணுவத்தினருக்கு சி.எஸ்.எம்.டி.யில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், மும்பை தலைவர் சஞ்சய் நிருபம், நடிகை நக்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பட்ஜெட் தாக்கல் ஒத்திவைப்பு
பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்கள் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். லால்பாக் குருகுல் ஓவியப்பள்ளி மாணவர்கள், பாரத மாதா வீரமரணம் அடைந்த வீரரை மடியில் வைத்து வீரவணக்கம் செலுத்துவது போன்றும், பயங்கரவாதியை சங்காரம் செய்வது போன்றும் நெஞ்சை உருக்கும் வகையில் ஓவியம் வரைந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
நவிமும்பை மாநகராட்சியின் 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட இருந்தது. பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பட்ஜெட் தாக்கல் ஒத்தி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story