மானாமதுரையில் முறையாக மின்சார கணக்கீடு செய்ய வலியுறுத்தல்


மானாமதுரையில் முறையாக மின்சார கணக்கீடு செய்ய வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Feb 2019 4:00 AM IST (Updated: 16 Feb 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரையில் மின்சார கணக்கீட்டை முறையாக செயல்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மானாமதுரை,

மானாமதுரை கோட்டத்தில் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இதில் வீடு மற்றும் வர்த்தக உபயோகம், விவசாயமும் உள்ளடங்கும். மதுரை கோட்டத்தில் மதுரை, சிவகங்கை,தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கி மண்டலங்களாக இணைத்து 10 இலக்க எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை வைத்து மதுரை கோட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் மின் கட்டணம் செலுத்தலாம்.

மானாமதுரை நகரில் மின் கட்டணம் கணக்கிட மின்வாரிய ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வீடுகளுக்கு நேரடியாக மின் கட்டணம் கணக்கிட செல்வது இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:– மின்வாரிய ஊழியர்கள் மின்சார கணக்கீட்டை முறையாக செய்வது இல்லை. அவர்கள் தங்களுக்காக தற்காலிக பணியாளர்களை நியமித்து மின் கட்டணத்தை கணக்கிட்டு வருகின்றனர். சாதாரணமாக 2 மாதங்களுக்கு ஒரு முறை 200 ரூபாய் மின் கட்டணம் செலுத்திய வீடுகளில் தற்போது 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை தற்காலிக ஊழியர்கள் கணக்கிட்டுள்ளனர்.

இதனால் மின்சார கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் கடும் அவதியடைகிறோம். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மின்சார கணக்கீடு குறித்து உயர் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவர்களும் அதை செய்வதில்லை. இந்தநிலையில் பெரும்பாலான வீடுகளில் டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பணி காரணமாக வெளியூர்களில் வசிப்பவர்களின் வீடுகள் பூட்டி கிடப்பதால், அந்த வீடுகளுக்கும் 3 மற்றும் 4 ஆயிரம் ரூபாய் என மின்சாரம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த வீட்டு உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மின்சார மீட்டர் பழுதாகி உள்ளதாக தெரிவித்தாலும், அதை உடனே சரி செய்ய மின்வாரிய ஊழியர்கள் வருவதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் மானாமதுரையில் மின்சார கணக்கீட்டை முறையாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அரசுக்கும் வலியுறுத்தி உள்ளோம் என்றனர்.


Next Story