நாடாளுமன்ற தேர்தல்: பா.ஜனதா 260 தொகுதிகளில் வெற்றி பெறும் ராம்தாஸ் அத்வாலே கணிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 260 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்து உள்ளார்.
நாக்பூர்,
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 260 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்து உள்ளார்.
அத்வாலே பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிகள் எத்தனை இடங்கள் பிடிக்கும், ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்பது அரசியல் அரங்கில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது.
இந்த நிலையில் நாக்பூர் வந்த மத்திய சமூக நீதித்துறை மந்திரியும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலேயிடம் பா.ஜனதாவின் வெற்றி நிலவரம் குறித்து நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-
உத்தரபிரதேசத்தில் இழப்பு
உத்தரபிரதேசத்தில் இந்த முறை 15 முதல் 20 தொகுதிகளை பா.ஜனதா இழக்க நேரிடலாம். ஆனால் அது பா.ஜனதாவுக்கு பின்னடைவாக இருக்காது. காரணம், வடகிழக்கு மாநிலங்களில் அதை பா.ஜனதா ஈடுசெய்து விடும்.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை விட பா.ஜனதா நன்கு செல்வாக்கு பெற்றுள்ளது. அங்கு பா.ஜனதாவுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் கடுமையான போட்டி நடக்கும்.
260 தொகுதிகளில் வெற்றி
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மாயாவதியுடன் கூட்டணி வைத்துகொண்டு மோடியை எதிர்த்த போதிலும் அவரது தந்தை முலாயம்சிங் யாதவ் மோடியை ஆதரிக்கிறார். இதனால் தான் ஒட்டுமொத்த இந்திய மக்களுடைய மனதின் குரலாக மோடி இருக்கிறார். மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் கூட்டணி பா.ஜனதாவை எந்த விதத்திலும் பாதிக்காது.
எனது கணிப்புபடி பா.ஜனதா 260 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் 282 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றி இருந்தது.
மோடியா? கட்காரியா?
மேலும் பா.ஜனதா வெற்றி பெற்றால் அடுத்த பிரதமர் மோடியா? அல்லது நிதின் கட்காரியா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ராம்தாஸ் அத்வாலே பதிலளித்து கூறியதாவது:-
நிதின் கட்காரி எனக்கு நல்ல நண்பர். மத்திய மந்திரி சபையில் துடிப்பாக செயல்படும் மந்திரி. ஆனால் மோடி தான் அடுத்த பிரதமர். மோடியின் தலைமையில் தான் பா.ஜனதா தேர்தலை சந்திக்கிறது. எனவே அவருக்கு தான் பிரதமர் பதவி வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஒருவேளை பிரதமர் பதவிக்கு கட்காரி பெயர் தேர்வு செய்யப்பட்டால் அதுவும் நல்லது தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story