பெருங்குளத்தில் ரூ.6 லட்சத்து 85 ஆயிரம் செலவில் கலையரங்கம் அன்வர்ராஜா எம்.பி. திறந்து வைத்தார்
பெருங்குளத்தில் ரூ.6 லட்சத்து 85 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட கலையரங்கத்தை அன்வர்ராஜா எம்.பி. திறந்து வைத்தார்.
பனைக்குளம்,
மண்டபம் யூனியன் பெருங்குளம் மேற்கு பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் அருகே ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் ரூ.6 லட்சத்து 85 ஆயிரம் செலவில் நவீன கலையரங்கம் கட்டப்பட்டுஉள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மண்டபம் பேரூராட்சி முன்னாள் தலைவர் தங்கமரைக்காயர், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புதுமடம் தர்வேஸ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சேகு ரகுமத்துல்லா, பொன்.முத்துவேல், முஸ்லிம் ஜமாத் தலைவர் (பொறுப்பு) நல்லமீரான்கனி, ராமகிருஷ்ணன், மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா கலந்து கொண்டு கலையரங்கத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக பெருங்குளம் அ.தி.மு.க. ஊராட்சி கழக செயலாளர் ஜானகிராமன் அனைவரையும் வரவேற்றார்.
அதனை தொடர்ந்து அன்வர்ராஜா எம்.பி. பேசியதாவது:– ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எம்.பி. நிதியின் மூலம் பல்வேறு திட்டப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுஉள்ளது. குறிப்பாக கிராமங்கள்தோறும் கலையரங்கம், கல்விக்கூடங்களுக்கான சுற்றுச்சுவர், குடிநீர் குழாய் இணைப்புகள், உயர்கோபுர மின்விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் நமது பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு அவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இதேபோல சாலைகள் இல்லாத கிராமங்களுக்கு சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அ.தி.மு.க. அரசு மக்களுக்கான பல்வேறு திட்டப்பணிகளை செய்து தரும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் வட்டான்வலசை செயலாளர் கண்ணுச்சாமி, சிவக்குமார், கர்ணன், கருப்பையா, கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.