தஞ்சையில் மாநகராட்சி பள்ளியின் முன்பு சிதறி கிடக்கும் குப்பைகள் தொற்றுநோய் பரவும் அபாயம்


தஞ்சையில் மாநகராட்சி பள்ளியின் முன்பு சிதறி கிடக்கும் குப்பைகள் தொற்றுநோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 16 Feb 2019 3:30 AM IST (Updated: 16 Feb 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் மாநகராட்சி பள்ளியின் முன்பு சிதறி கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

மனிதன் பயன்படுத்திய கழிவுகளான குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என 2 வகைப்படும். பழங்காலத்தில் குப்பை குழிகள் இருந்தன. அதில் வீட்டு குப்பைகளை கொட்டி மக்கச் செய்வார்கள். மக்கிய குப்பைகள் உரமாக வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும். இன்றைக்கு குப்பை குழிகள் எந்த வீடுகளிலும் இல்லை. குப்பை கிடங்கு தான் நம் பயன்பாட்டில் இருக்கின்றன. அதில் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் பொருட்களே அதிகம். இவை காற்றில் பறந்து எங்கும் பரவி சுற்றுப்புறத்தை மாசுபடுத்துகிறது. கால்வாய்களில் விழுந்து கழிவுநீர் செல்லவிடாமல் தடுத்து கொசுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது.

குப்பைகள் இன்றைக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. குப்பைகளை எங்கு கொட்டுவது என்று தெரியாமல் தெரு ஓரங்களில், ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் என அனைத்து நீர்நிலைகளிலும் கொட்டப்படுகின்றன. இதனால் நம் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதோடு மற்ற உயிர்களுக்கும் இன்னல்களை விளைவிக்கிறது. தஞ்சை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் வீடு தோறும் நேரில் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அப்படி வீடுகள் தோறும் பல இடங்களில் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் வாங்குவது கிடையாது. இதனால் சாலையோரம் இருக்கும் குப்பை தொட்டியில் குப்பைகளை மக்கள் கொட்டிவிட்டு செல்கின்றனர். அந்த தொட்டி குப்பைகளால் நிரம்பினாலும் பல இடங்களில் குப்பைகளை அள்ளி செல்வது இல்லை. பல இடங்களில் குப்பை தொட்டிகள் உடைந்து இருப்பதால் குப்பைகள் சாலையோரம் தான் கொட்டப்படுகிறது.

தஞ்சை கீழவாசல் சின்னக்கடை தெருவில் 3 இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த 3 தொட்டிகளும் உடைந்து இருப்பதால் அந்த தொட்டியின் அருகே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இந்த குப்பைகளில் சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்கிறதா? என மாடுகள், ஆடுகள் கிளறுவதால் குப்பைகள் சாலையின் மையப்பகுதி வரை சிதறி கிடக்கிறது. அதுவும் சின்னக்கடை தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முன்பு குப்பைகளுடன் அதிக அளவில் பிளாஸ்டிக் பைகள் தான் கிடக்கின்றன.

இந்த குப்பைகளை அள்ளாததால் கொசுக்கள் உற்பத்தியாகி பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அள்ளுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறும்போது, சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அள்ளி செல்வது கிடையாது. இது குறித்து யாரிடம் புகார் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. குப்பைகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. இந்த கொசுக்கள் பள்ளி மாணவர்களை கடித்தால் அவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதியாவது குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடைந்த குப்பை தொட்டிகளை மாற்றிவிட்டு புதிய தொட்டிகளை வைக்க வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். தொட்டியில் குப்பைகளை கொட்டாமல் சாலையோரம் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனர்.

Next Story