காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான அரியலூர் ராணுவ வீரர் குடும்பத்தினர் கதறல்


காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான அரியலூர் ராணுவ வீரர் குடும்பத்தினர் கதறல்
x
தினத்தந்தி 16 Feb 2019 3:45 AM IST (Updated: 16 Feb 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் அரியலூர் ராணுவ வீரரும் பலியானார். இதைக்கேள்விப்பட்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

ஜெயங்கொண்டம், 

காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அவர்களது வாகனங்கள் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புலவாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.

அப்போது பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடி குண்டுகளை நிரப்பிய சொகுசு காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதினான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின.

அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. மேலும் அணிவகுத்து வந்த பல வாகனங்களும் சேதமடைந்தன. தாக்குதலுக்கு உள்ளான பஸ்சில் பயணம் செய்த 44 துணை ராணுவ வீரர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். காஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்களை குறி வைத்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி, பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பலியான 44 வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் அடங்குவர். இதில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவசந்திரனும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா சவலப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியனும் ஆவார்கள். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு மட்டுமின்றி தலா ரூ.20 லட்சம் உடனடியாக வழங்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டார்.

தாக்குதலில் பலியான அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவசந்திரன் குறித்த விவரம் வருமாறு:-

உடையார்பாளையம் தாலுகா தா.பழூர் அருகே கார்குடி கிராமத்தில் உள்ள காலனி தெருவை சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி சிங்காரவள்ளி. இந்த விவசாய தம்பதிக்கு 2-வதாக பிறந்தவர் சிவசந்திரன்(வயது 33). எம்.ஏ. பிஎட். பட்டதாரியான இவருக்கு நாட்டின் மீது அதிக பற்று ஏற்பட்டதால், ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் கடந்த 2010-ம் ஆண்டில் நடந்த ராணுவத்திற்கான ஆட்கள் தேர்வில் கலந்து கொண்டு தேர்வானார். 2010-ம் ஆண்டு முதல் சிவசந்திரன் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்களை குறி வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் நடத்திய வெடி குண்டு தாக்குதலில் இவரும் பலியான சம்பவம் அந்த கிராமத்தை மட்டுமல்லாமல் அரியலூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சிவசந்திரன் தனது கிராமத்தை சேர்ந்த காந்திமதி(28) என்கிற பெண்ணை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது 2 வயதில் சிவமுனியன் என்கிற மகன் உள்ளான். மேலும் காந்திமதி தற்போது கர்ப்பமாக உள்ளார். கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி சிவசந்திரன் காஷ்மீரில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

பின்னர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து விட்டு, கடந்த வாரம் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று தரிசனம் செய்தார். பின்னர் விடுமுறை முடிந்து மீண்டும் ராணுவத்தில் பணியாற்ற கடந்த 9-ந் தேதி சிவசந்திரன் சொந்த ஊரில் இருந்து புறப்பட்டு காஷ்மீர் சென்றார்.

நேற்று முன்தினம் மதியம் தான் சிவசந்திரன் தனது குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனது மனைவி காந்திமதியிடம் மகன் சிவமுனியனை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறும், கர்ப்பமாக உள்ள நீயும் தவறாமல் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறும், நன்கு உடலை கவனித்து கொள்ளுமாறும் சிவசந்திரன் பேசியதாக தெரிவித்தார்.

காஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்களை குறி வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிவசந்திரன் பலியான சம்பவத்தை கேள்விப்பட்ட பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது புகைப்படத்தை வைத்து அவரது மனைவி காந்திமதி கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

வீர மரணம் அடைந்த சிவசந்திரனுக்கு ஜெயந்தி என்கிற அக்காவும், ஜெயசித்ரா என்கிற தங்கையும், செல்வசந்திரன் என்கிற தம்பியும் உள்ளனர். இதில் செல்வசந்திரன் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஆண்டு வேலை பார்த்தபோது மின்சாரம் தாக்கி பலியானார். ஜெயந்தி திருமணமாகி கார்குடி கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். மனநிலை பாதிக்கப்பட்டவரான ஜெயசித்ரா வீட்டில் பெற்றோரின் பராமரிப்பில் உள்ளார். சின்னையன்- சிங்காரவள்ளி தம்பதி ஏற்கனவே இளைய மகன் செல்வசந்திரனை மின்சாரம் தாக்கியதில் பறி கொடுத் தனர். இந்நிலையில் சிவசந்திரனையும் பறிகொடுத்து விட்டு தவித்து வருகின்றனர்.

சிவசந்திரனின் தந்தை சின்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறு வயது முதலே சிவசந்திரன் நாட்டுப்பற்று மிக்கவராக இருந்து வந்தார். எப்போதும் நாடு, நாடு என்று கூறுவார். நாட்டை காப்பாற்ற சென்றவர் வீட்டில் உள்ளவர்களை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டார். விடுமுறையில் வந்திருந்தவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பே பணிக்கு சென்றார். நேற்று மதியம் (அதாவது நேற்று முன்தினம் மதியம்) 12 மணியளவில் சிவசந்திரன் அவரது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அரசு என்னதான் சலுகைகள் கொடுத்தாலும் இனி என் மகனின் உயிர் வராது. நாட்டுக்காக அவரை அர்ப்பணித்து கொண்டார். இப்படி ஒரு பிள்ளையை பெற்றதற்காக பெருமைப்படு கிறேன்.

இவ்வாறு கூறி கதறி அழுதார்.

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் ஜெயங்கொண்டம் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி மற்றும் போலீசார் சிவசந்திரன் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். சிவசந்திரனின் இறுதி அஞ்சலி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மேலும் சிவசந்திரன் வீட்டிற்கு அருகில் உள்ள அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

Next Story