அய்யனார் கோவில் குதிரைக்கு அணிவிக்க காகித மாலை தயாரிக்கும் பணிகள் தொடக்கம்


அய்யனார் கோவில் குதிரைக்கு அணிவிக்க காகித மாலை தயாரிக்கும் பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 16 Feb 2019 3:15 AM IST (Updated: 16 Feb 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

அய்யனார் கோவில் குதிரைக்கு அணிவிக்க காகித மாலை தயாரிக்கும் பணிகள் தாமதமாக தொடங்கியது.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில், பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவிலில் மாசிமக திருவிழா பிரசித்தி பெற்றது. அதிலும் கோவில் முன்பு அமைந்துள்ள 33 அடி பிரமாண்ட குதிரை சிலைக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக 35 அடி உயரத்தில் பளபளக்கும் காகித மாலைகளை அணிவிப்பதை காணவே புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கூடுவார்கள். அதற்காக சிறப்பு பஸ் வசதிகளும் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மாலைகள் குவிந்து குதிரையின் சிலையை மறைக்கும். அந்த அளவிற்கு பக்தர்கள் ரூ.3 ஆயிரத்தில் தொடங்கி ரூ.10 ஆயிரம் வரை மதிப்பில் வாங்கப்படும் மாலைகளை வாகனங்களில் ஏற்றி வந்து நீண்ட வரிசையில் நின்று அணிவித்து செல்வார்கள்.

இந்த ஆண்டு வருகிற 19-ந் தேதி செவ்வாய்க்கிழமை மாசிமகத் திருவிழா நடக்க உள்ள நிலையில் மாலைகள் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிளாஸ்டிக் பொருட்களை தமிழக அரசு தடை செய்துள்ளது. குதிரை சிலைக்கு இதுவரை அணிவிக்கப்பட்டு வந்த பளபளக்கும் காகித மாலைகள் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் வருமா அல்லது அந்த காகிதத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்று கடந்த சில மாதங்களாக அறநிலையத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளிடம் அப்பகுதி இளைஞர்களும், கிராம பொதுமக்கள், மாலை கட்டுபவர்கள் பல முறை கேட்டும் அதிகாரிகள் இதுவரை தெளிவான பதில் சொல்லவில்லை. அதிகாரிகளின் பதிலுக்காக காத்திருந்த மாலை கட்டுபவர்கள் பக்தர்களிடம் மாலை கட்ட முன்பணம் வாங்காமல் தவிர்த்து வருகின்றனர். அதாவது 2 மாதங்களுக்கு முன்பே மாலைகள் கட்டும் பணிகள் தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு அதிகாரிகளின் குழப்பத்தால் பலர் மாலை கட்டுவதையே நிறுத்திவிட்டனர்.

இந்த நிலையில் குளமங்கலம், கொத்தமங்கலம் உள்ளிட்ட சில ஊர்களிலும் கீரமங்கலத்தில் சிலருக்கும் மட்டுமே தாமதமாக அதாவது ஒரு வாரத்திற்குள் வண்ண காகிதங்களை கொண்டு மாலைகள் கட்ட தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கீரமங்கலத்தில் மட்டும் சுமார் 750 மாலைகள் கட்டப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 100 மாலைகளுக்குள் மட்டுமே கட்டப்படலாம்.

இதுகுறித்து மாலை கட்டும் தொழிலாளர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு வரை கட்டிய பளபளக்கும் காகிதங்களை இந்த ஆண்டு பயன்படுத்தலாமா என்று கேட்டும் அதிகாரிகள் தெளிவான பதில் சொல்லாததால் கால தாமதமாக வண்ண காகிதங்களை கொண்டு மாலை கட்டும் பணி தொடங்கி உள்ளது. அதனால் குறைந்த அளவு மாலைகளை மட்டுமே கட்ட முடியும். அதிலும் குறைந்த காலம் மட்டுமே இருப்பதால் அதிகமான தொழிலாளர்கள், அதிக சம்பளம் கொடுத்து பணிகள் நடக்கிறது. அதனால் வழக்கத்தைவிட மாலையின் விலையும் உயர்ந்துள்ளது. நேர்த்திக்கடன் செலுத்த மாலை அணிவிப்பது தான் சிறப்பு. அதிகாரிகள் குழப்பத்தால் இந்த வருடம் மாலை கட்டி நேர்த்திக்கடன் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினர். 

Next Story