ஓட்டேரி பகுதியில் தேங்கிய கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
ரேஷன் கடை முன்பு கழிவுநீர் தேங்கி, சேறும் சகதியுமாக உள்ளதால் கடைக்கு வரும் பொதுமக்கள் துர்நாற்றத்துக்கு இடையே நின்று பொருட்கள் வாங்கிச் செல்லும் நிலை உள்ளது.
திரு.வி.க.நகர்,
சென்னை ஓட்டேரி குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள ரேஷன் கடை முன்பு கழிவுநீர் தேங்கி, சேறும் சகதியுமாக உள்ளதால் கடைக்கு வரும் பொதுமக்கள் துர்நாற்றத்துக்கு இடையே நின்று பொருட்கள் வாங்கிச் செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கிச் செல்லும் முதியவர்கள், தேங்கி நிற்கும் கழிவுநீர் சேற்றில் தவறி விழுவதாகவும், இதனால் பொருட்கள் வீணாவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ரேஷன் கடை முன்பு தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதே போல், ஓட்டேரி குன்னூர் நெடுஞ்சாலையில் செல்லும் நல்லா கால்வாய் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கழிவுநீர் செல்லும்பாதையில் தடை ஏற்பட்டு சாலையோரம் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியே செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.
இந்த கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கால்வாய் சீரமைப்பு பணியை விரைந்து முடித்து, கழிவுநீர் சாலையில் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story