கரூர் தொகுதியில் நான் மீண்டும் போட்டியிட உத்தரவாதம் இல்லை தம்பிதுரை பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் நான் மீண்டும் போட்டியிட உத்தரவாதம் இல்லை என தம்பிதுரை கூறினார்.
அரவக்குறிச்சி,
அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான மு.தம்பிதுரை, கடந்த சில வாரங்களாக மத்திய அரசை விமர்சித்து வருகிறார். மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்துக்கு எந்த நல்ல திட்டங்களையும் செய்யவில்லை. போதிய நிதியையும் ஒதுக்கவில்லை. அதனால் பா.ஜ.க.வை நாங்கள் ஏன் தோளில் சுமக்க வேண்டும் என்றெல்லாம் விமர்சித்தார்.
அ.தி.மு.க. கூட்டணி குறித்து அவர் கூறிய கருத்துகளுக்கு அ.தி.மு.க. மேல்மட்ட தலைவர்கள், அமைச்சர்கள் தம்பிதுரையின் கருத்து தனிப்பட்டது என்று தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
வருகிற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தம்பிதுரையும் மனுகொடுத்துள்ளார். அதேநேரத்தில் கரூர் தொகுதியில் போட்டியிட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியும் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த சூழ்நிலையில் கரூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு இருவரில் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதேஅ.தி.மு.க.வினர் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள சீத்தப்பட்டி காலனி பகுதியில் மக்கள் குறைகேட்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட யார் வேண்டுமானாலும் விருப்ப மனு அளிக்கலாம். நானும் விருப்ப மனு அளித்துள்ளேன். கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட எனக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. வேட்பாளர் நியமனம் தொடர்பாக தலைமை கழகம் தான் முடிவு எடுக்கும். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பிக்கு கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் அவரது வெற்றிக்கு நான் பாடுபடுவேன். இதில் கருத்து வேறுபாடு ஏதும் பார்க்கமாட்டோம். தேர்தல் கூட்டணி பற்றி முடிவு எடுக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நான் இடம் பெறவில்லை. இதனால் கூட்டணி குறித்து நான் எதுவும் கூற முடியாது. தனித்து போட்டியிடுவது தான் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கை. ஆனால் தற்போது தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு என்ன முடிவு எடுக்கிறதோ? அதன்பேரில் கூட்டணி அமையும். மற்ற கட்சிகள் பற்றி தெரியாது. ஆனால் அ.தி.மு.க.வுக்கு மக்கள் செல்வாக்கு தற்போது அதிகமாகவே இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் தமிழர்களின் உரிமையை காக்க குரல் எழுப்பினோம். அதற்கும் தேர்தல் கூட்டணிக்கும் சம்பந்தம் கிடையாது என்றும், திருப்பூரில் பிரதமர் மோடி பேசும்போது, எதிர்க்கட்சிகள் எல்லாமே ஒரு கலப்பட கூட்டணி என்று சொல்லி இருக்கிறார். கூட்டணி என்றாலே கலப்படம் தானே. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கும். ஒரு பொதுக்கருத்தினை முன்வைத்து போட்டியிடுவது பற்றியும், எதிர்க்கட்சிகள் கொள்கையில்லாமல் சேர்ந்திருப்பதையும் பிரதமர் பேசியிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். மேலும், தமிழகத்தில் மோடி கலந்து கொண்ட இரண்டு அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது குறித்து தம்பிதுரையிடம் கேட்டபோது, அதற்கு, ‘இது மத்திய அரசு விழா என்று நீதிமன்றமே பதில் அளித்து விட்டது’ என தெரிவித்தார்.
Related Tags :
Next Story