போலீஸ் நிலையம் முன் மதுரை வாலிபர் தீக்குளிக்க முயற்சி


போலீஸ் நிலையம் முன் மதுரை வாலிபர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 16 Feb 2019 4:16 AM IST (Updated: 16 Feb 2019 4:16 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி வாலிபர் தீக்குளிக்க முயன்றார்.

ஆண்டிப்பட்டி,

மதுரை மாவட்டம் கீழதிருமாணிக்கம் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன் (வயது 27). இவருடைய தங்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மயிலாடும்பாறையை சேர்ந்த குணா என்பவர் அவரை கடத்தி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து புகார் அளிப்பதற்காக அலெக்ஸ்பாண்டியன் மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்துள்ளனர். மேலும் சம்பவம் நடந்த இடம் மதுரை கீழதிருமாணிக்கம் போலீஸ் நிலையம் என்பதால் அங்கு சென்று புகார் கொடுக்குமாறு கூறினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அலெக்ஸ்பாண்டியன், போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்தார். பின்னர் தனது தங்கையை மீட்டு தரக்கோரி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அலெக்ஸ்பாண்டியன் கையில் வைத்திருந்த பெட்ரோல் கேன் மற்றும் தீப்பெட்டியை பிடுங்கி வீசினர்.

மேலும் போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இந்த சம்பவத்தால் மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக அலெக்ஸ்பாண்டியன் மீது மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story