திரைப்பட பாணியில் வங்கியில் கொள்ளை
பெல்ஜியம் நாட்டில் வங்கி ஒன்றில் திரைப்பட பாணியில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.
பெல்ஜியம் நாட்டின் ஆன்ட்வெர்ப் நகரத்தின் வைர வர்த்தகப் பகுதியில் உள்ள குறிப்பிட்ட வங்கியில் கொள்ளையடிப்பதற்கு பாதாள சாக்கடை வழியாக சுரங்கம் அமைத்துள்ளனர் கொள்ளையர்கள்.
அங்கு கொள்ளை நடந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் வங்கிக்குச் சென்றனர். அப்போது வங்கியின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தபோதும் அதன் உள்ளே இருந்த 30 டெபாசிட் பெட்டிகள் காலியாக இருந்தன.
பாதாள சாக்கடை குழாய்களின் அகலம் 40 செ.மீ.தான். கொள்ளையர்கள் அந்தக் குறுகிய குழாய் வழியாக கஷ்டப்பட்டுச் சென்று இன்னொரு சுரங்கம் தோண்டி வங்கியை அடைந்திருக்கின்றனர்.
அந்த வங்கியில் எவ்வளவு பணம் திருடுபோனது என்பது பற்றி போலீசார் அறிவிக்கவில்லை.
தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த பொறியாளரான எல்ஸ் லீகின்ஸ் என்பவர் இதுகுறித்துக் கூறுகையில், இந்த திருட்டு மிகவும் சிக்கல் வாய்ந்தது என்றார்.
‘‘முதலில் பாதாள சாக்கடையை நோக்கி சுரங்கம் தோண்ட வேண்டும். இது திருடர்களுக்கு மிகவும் அபாயகரமானது. ஏனெனில் நில அடுக்கு கீழ்நோக்கி நகரக்கூடும். மேலும் பாதாள சாக்கடைக்குள் பல்வேறு வகையான அபாயம் உண்டு. கழிவுநீரில் இருந்து நச்சுவாயுக்கள் வெளியே வரும். இதில் இருந்து திருடர்கள் எப்படி உயிருடன் தப்பினார்கள் என்பதே தெரியவில்லை’’ என்றார்.
கொள்ளைச் சம்பவத்துக்குப் பின் வங்கி யிடம் இருந்து சரியான தகவல் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். சிலர் தங்களது டெபாசிட் பெட்டகத்தில் தமது வாழ்நாள் சேமிப்புகள் இருந்ததாகத் தெரிவிக்கின்றனர்.
வெறும் பணம் அல்லது நகையை மட்டும் மக்கள் அப்பெட்டகங்களில் வைக்கவில்லை. குடும்ப சொத்து ஆவணங்களும் அதில் இருந்தன என்கிறார் ஒருவர்.
இதேபோன்ற கொள்ளைச் சம்பவம், 1976-ம் ஆண்டு பிரெஞ்சு நகரமான நைசில் நடந்தது. ஒரு கொள்ளைக் கூட்டம் பல மாதங்கள் செலவழித்து பாதாள சாக்கடை வழியாக சுரங்கம் தோண்டி ஒரு வங்கியின் 200 பாதுகாப்பு பெட்டகங்களையும் கொள்ளையடித்தது. மில்லியன் கணக்கிலான டாலர்கள் கொள்ளை போன அச்சம்பவம் அக்காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story