ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்த பரிதாபம்


ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்த பரிதாபம்
x
தினத்தந்தி 16 Feb 2019 4:28 PM IST (Updated: 16 Feb 2019 4:28 PM IST)
t-max-icont-min-icon

நெதர்லாந்து கடற்கரையோரம் நெடுகிலும் ஆயிரக்கணக்கான கடற்பறவைகள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சுமார் 20 ஆயிரம் வடதுருவ கடற்பறவைகள் சமீப வாரங்களில் இறந்துள்ள மர்மம் தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் புயலில் சிக்கிய, பனாமா நாட்டு கொடியோடு பயணித்த கப்பலில் இருந்து சுமார் 345 கொள்கலன்கள் கடலில் விழுந்ததால் இது நிகழ்ந்திருக்கக் கூடுமா என்று நிபுணர்கள் ஆராய்கின்றனர்.

வடக்கு நெதர்லாந்து கடலோரங்களில் சமீப நாட்களில் இந்த சோகம் நிகழ்ந்துவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரபின், பிளாஸ்டிக்குகள் மற்றும் பாலீஸ்டைரின் உள்பட மோசமான பொருட்கள் இந்த கொள்கலன்கள் சிலவற்றில் இருந்ததாக நம்பப்படுகிறது. எம்.எஸ்.சி. சோயி என்ற அந்தக் கப்பலில் இருந்து கொள்கலன்கள் விழுந்த சில மணிநேரங்களில், அதில் இருந்த குழந்தைகளுக்கான பொம்மைகள், மரப் பொருட்கள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகள் கடலோரத்துக்கு அடித்து வரப்பட்டன.

இறந்த கடற்பறவைகளின் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக கடற்பறவை நிபுணர் மர்டிக் லியோபோல்டு தெரிவித்தார். நெதர்லாந்தில் 300 கி.மீ. தொலைவுடைய கடற்கரையில் ஒரு நாளைக்கு ஒரு கிலோமீட்டரில் இருக்கும் பறவையின் விகிதத்தின் அடிப்படையில் இந்த இறந்த பறவைகளின் எண்ணிக்கை தெரிவிக்கப்படுகிறது.

‘‘கடற்கரையில் 10 ஆயிரம் பறவைகள் இறந்த நிலையில் காணப்படுகின்றன. இதேபோன்ற எண்ணிக்கையில் பறவைகள் கடலில் இருக்கலாம்’’ என்று அவர் தெரிவித்தார்.

கொள்கலன்கள் கடலில் விழுந்த பின்னர், அதன் கழிவால் பறவைகள் இறந்திருக்கலாம். மோசமான வானிலையும் இந்தப் பறவை களுக்கு உணவு கிடைப்பதைத் தடுத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அங்கு டெர்ச்செல்லிங் தீவின் கடலோரத்தில் பாரபினும் கரை ஒதுங்கியிருந்தது.

முன்பு நம்பப்பட்டதைவிட 54 கொள்கலன்கள் அதிகமாக, அதாவது குறைந்தது 345 கொள் கலன்கள் கப்பலில் இருந்து கடலுக்குள் விழுந்துள்ளதாக நெதர்லாந்து அதிகாரிகள் தெரிவித் தனர். இவ்வளவு அதிக பறவைகள் இறந்துள்ள தற்கான காரணத்தை அறிய 100 பறவைகளின் உடற்கூறு ஆய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டஜன் கணக்கான பறவைகள் நோயுற்றும், மெலிந்தும், மிகவும் பலவீனமாகவும் இருப்பதால் கடலோரத்தில் உள்ள சரணாலயத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. பல மையங்களில் வைத்துப் பராமரிக்கப்படும் இவை மிகவும் பலவீனமாக இருப்பதால், குழாய் மூலம் உணவு வழங்கப்படுகிறது.

நெதர்லாந்தின் வடக்கில் உள்ள உரிடெப்பில் 11 கடற்பறவைகள் மீண்டும் நல்ல உடல்நலம் பெற்றுள்ளன. இந்தப் பறவைகளின் இரைப்பைகளில் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டாலும், கொள்கலன் கழிவுகள்தான் இதற்குக் காரணம் என்று இன்னும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை.

உயிர் தப்பியுள்ள இந்தப் பறவைகள் முழுமையான உடல்நலம் பெற இன்னும் நீண்டகாலம் ஆகும் என்றாலும், அவற்றால் மீண்டும் கடலுக்குத் திரும்ப முடியும் என்று இவற்றைப் பராமரிக்கும் மையங்கள் நம்புகின்றன.

மனிதனின் செயல்பாடுகளால் அதற்கு எவ் விதத்திலும் சம்பந்தப்படாத உயிரினங்கள் பாதிக்கப்படுவது பரிதாபம்தான்.

Next Story