கரும்பு ஜூஸ் கடைக்காரரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் கடையடைப்பு-கண்டன ஊர்வலம்
கரும்புஜூஸ் கடைக்காரரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கடையடைப்பு - கண்டன ஊர்வலம் நடந்ததால் மத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சித்தாண்டி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 32). இவர் மத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் கரும்புஜூஸ் கடை நடத்தி வருகிறார். பள்ளிக்கு எதிரில் சக்திவேலுவுக்கு சொந்தமான கரும்பு தோட்டமும் உள்ளது.
மத்தூர் இந்திராகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். அவன் சக்திவேலுவுக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் உள்ள கரும்புகளை திருட்டுத்தனமாக வெட்டி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கரும்பு தோட்டத்தில் இருந்த சிறுவனை பார்த்த சக்திவேல் உனக்கு இங்கு என்ன வேலை? என்று கேட்டு கண்டித்ததுடன் சிறுவனை அடித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற சிறுவன் தனது தந்தையிடம், சக்திவேல் தன்னை தாக்கியதாக கூறினான். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவனின் தந்தை உள்பட 4 பேர் சக்திவேலின் வீட்டிற்கு சென்று அவரை தாக்கியதாக தெரிகிறது. மேலும் மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்த சக்திவேலை சிறுவனின் உறவினர்கள் மீண்டும் வந்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சக்திவேல் மருத்துவமனை எதிரில் உள்ள மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தன்னை காப்பாற்றும்படி கூறினார்.
இது குறித்து தகவல் அறிந்த சக்திவேலின் உறவினர்கள் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நண்பர்கள் என ஏராளமானவர்கள் மத்தூரில் திரண்டனர். அவர்கள் சக்திவேலை தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தினார்கள். மேலும் மத்தூர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. தொடர்ந்து சக்திவேலின் உறவினர்கள் ஊர்வலமாக மத்தூர் இந்திரா குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்றனர்.
இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அவர்களை மத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன்.குணசேகரன் சமாதானப்படுத்தினார். மேலும் போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். இது தொடர்பாக ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டி உத்தரவின் பேரில் இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சக்திவேலை தாக்கியவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து ஊர்வலமாக சென்றவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story