வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு இரங்கல் கூட்டம்-மவுன ஊர்வலம்


வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு இரங்கல் கூட்டம்-மவுன ஊர்வலம்
x
தினத்தந்தி 16 Feb 2019 9:45 PM GMT (Updated: 16 Feb 2019 7:32 PM GMT)

வீர மரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரங்கல் கூட்டம், மவுன ஊர்வலம் நடந்தது.

கோவில்பட்டி, 

வீர மரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரங்கல் கூட்டம், மவுன ஊர்வலம் நடந்தது.

கோவில்பட்டி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோத விட்டு பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர்.

வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு பகத்சிங் மன்றத்தினர் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

விளாத்திகுளம்

விளாத்திகுளத்தில் மவுன ஊர்வலம் நடந்தது. விளாத்திகுளம் வைப்பாற்று பாலத்தில் இருந்து பொதுமக்கள் மவுன ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று, விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு வந்தனர். தொடர்ந்து அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

ஆழ்வார்திருநகரி நாயக்கர் மண்டபத்தில் இருந்து பொதுமக்கள் மவுன ஊர்வலமாக புறப்பட்டு, நான்கு ரத வீதிகளின் வழியாக சென்று மீண்டும் நாயக்கர் மண்டபம் முன்பு வந்தனர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

ஏரல்

ஏரல் காந்தி சிலை முன்பிருந்து பொதுமக்கள், வியாபாரிகள் ஊர்வலமாக புறப்பட்டு பஜார், பஸ் நிலையம் வழியாக மீண்டும் காந்தி சிலை முன்பு வந்தனர். தொடர்ந்து அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளத்திலும் பொதுமக்கள் முக்கிய வீதிகளின் வழியாக மவுன ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர். திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி மத்திய மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பிரையண்ட் நகர் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் வில்சன் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் சதீஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சூசைமுத்து, மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story