காஷ்மீர் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
காஷ்மீர் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு நெல்லை மாவட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
திசையன்விளை,
காஷ்மீர் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு நெல்லை மாவட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அமைதி ஊர்வலம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் உள்பட 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் பலியானார்கள். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திசையன்விளையில் அமைதி ஊர்வலம் நடந்தது.
திசையன்விளை காமராஜர் சிலை முன்பு தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் காமராஜர் சிலையை வந்தடைந்தது. பின்னர் ராணுவ வீரர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நகர பா.ஜ.க. தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். மாநில இந்து முன்னணி பொது செயலாளர் அரசுராஜா, பா.ஜ.க. ராதாபுரம் தொகுதி பொறுப்பாளர் கனி அமுதா, மாவட்ட துணை தலைவர் சாந்தி ராகவன், பால்சாமி, இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், களக்காட்டில் நெல்லை-களக்காடு வாட்ஸ்-அப் குழு நண்பர்கள் சார்பில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், சமூக நல அமைப்பு நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மானூர்-செங்கோட்டை
மானூர் பஜாரில் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. செங்கோட்டை நகரசபை அலுவலகம் முன்பு மழை நண்பர்கள் குழு சார்பில் நிர்வாகிகள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். இதில் பஸ் நிலைய வாடகை கார் ஓட்டுனர்களும் கலந்து கொண்டனர்.
மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் மாஞ்சோலை கோட்டத்தில் தொடங்கி ரிஷி ஓடை வரை சென்று பஸ் நிறுத்தத்தில் முடிவடைந்தது. அப்போது ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் கருப்புக் கொடி ஏந்தி சென்றனர். பின்னர் பஸ் நிறுத்தத்தில் வீரர்களின் உருவ படங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தேயிலை தோட்ட துணை மேலாளர் வாஷ் நாயக், தலைமை மருத்துவ அலுவலர் ஆஷிஷ் குமார், நிர்வாக மேலாளர் சுதாகரன், கள அதிகாரிகள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story