‘நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியை அ.தி.மு.க. அமைக்கும்’ அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு


‘நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியை அ.தி.மு.க. அமைக்கும்’ அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
x
தினத்தந்தி 17 Feb 2019 3:45 AM IST (Updated: 17 Feb 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியை அ.தி.மு.க. அமைக்கும் என்று நெல்லையில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

நெல்லை, 

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியை அ.தி.மு.க. அமைக்கும் என்று நெல்லையில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

ஆலோசனை கூட்டம்

நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்த ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

மாநில ஜெயலலிதா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

அ.தி.மு.க. கோட்டை

அ.தி.மு.க.வில் இருக்கும் 1½ கோடி தொண்டர்கள் நாட்டு மக்கள் போற்றும் வகையில் ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாட வேண்டும். அ.தி.மு.க. சாதி, மதம், இனம் கடந்த இயக்கம் ஆகும். இதை சாதியின் பெயரால் யாரும் அபகரிக்க நினைத்தால் அதை விடமாட்டோம். இரட்டை இலை சின்னமும், அ.தி.மு.க. கொடியும் எங்கே இருக்கிறதோ? அங்கேதான் நாம் இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். இலக்கணம் வகுத்து கொடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம் எப்போதும் போல் அ.தி.மு.க.வின் கோட்டையாகவே உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த அரசு ஓரிரு நாட்களில் கவிழ்ந்து விடும் என்று கூறி வந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. அரசு 2 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. 2 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.3 லட்சம் கோடிக்கு முதலீடும், 11 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி ரூ.1,000 வழங்கினார். தற்போது ஏழை, எளிய குடும்பங்களுக்கு வறட்சி மற்றும் புயல் பாதிப்பையொட்டி தலா ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்து உள்ளார். இதனால் எதிர்க்கட்சியினர் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். ஜெயலலிதாவின் கனிவு, கருணை, மனிதநேயம், நிர்வாக திறமை, ஆற்றலுடன் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.

மக்கள் விரும்பும் கூட்டணி

தி.மு.க. 22 கட்சிகளுடன் சேர்ந்தாலும் அது பூஜ்யம் கூட்டணிதான். ஆனால் அ.தி.மு.க. கூட்டணி ராஜ்யத்தை ஆளும் கூட்டணி ஆகும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி சிறப்பான கூட்டணி அமைக்க உள்ளனர்.

கூட்டணி பற்றி தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். மக்கள் வரவேற்கும், மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய, மக்கள் நம்பிக்கையை பெறும், மக்கள் விரும்பும் கூட்டணி அமைக்கப்படும். மெகா கூட்டணி அமைப்போம். நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் 2 ஆண்டு ஆட்சியின் சாதனைகளை கூறி வெற்றி பெறுவோம். தி.மு.க.வின் பொய் பிரசாரத்தை முறியடிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ பேசுகையில், இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை முதன்முதலாக தொடங்கி இருப்பது அ.தி.மு.க. மட்டும்தான். தேர்தல் எப்போது வந்தாலும் அதில் ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வெற்றி பெறுவோம். ஜெயலலிதாவின் பட்டறையில் பயிற்சி பெற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதா போல் வியூகம் அமைத்து தேர்தலை சந்திக்க ஏற்பாடு செய்வார்கள். அ.தி.மு.க. தேர்தலில் சிறந்த வியூகம், ராஜதந்திரம் அமைத்து மகத்தான வெற்றியை பெறும். அ.தி.மு.க.தான் பாரத பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுக்கும் என்றார்.

முன்னதாக நெல்லை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு வரவேற்றார். நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., எம்.பி.க்கள் முத்துகருப்பன், விஜிலா சத்யானந்த், எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், செல்வ மோகன்தாஸ் பாண்டியன், இன்பதுரை, மனோகரன், அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல் முருகன், முன்னாள் பாசறை செயலாளர் அரிகரசிவசங்கர், கூட்டுறவு பேரங்காடி முன்னாள் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, எம்.ஜி.ஆர். மன்ற புறநகர் மாவட்ட செயலாளர் பெரியபெருமாள், ரெட்டியார்பட்டி நாராயணன், அக்ரோ முன்னாள் தலைவர் மகபூப் ஜான், கண்டிகைப்பேரி ஜான்சன் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story