காஷ்மீர் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு நெல்லையில் அஞ்சலி


காஷ்மீர் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு நெல்லையில் அஞ்சலி
x
தினத்தந்தி 16 Feb 2019 10:00 PM GMT (Updated: 16 Feb 2019 8:05 PM GMT)

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு நெல்லையில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

நெல்லை, 

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு நெல்லையில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நெல்லை மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நடந்தது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு காமராஜர் சிலை அருகில் துணை ராணுவ வீரர்கள் உருவப்படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அதன் முன்பு மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் மாநில செயலாளர் சிந்தா சுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு ஜெரீனா, ரமேஷ் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை சந்திப்பு சிந்துப்பூந்துறையில் நெல்லை டவுன் சிட்டி லயன்ஸ் பட்டயதலைவர் ஜானகிராம் அந்தோணி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பாரதியார் உலக பொது மன்ற பொது செயலாளர் கணபதி சுப்பிரமணியன், பாஸ்கரன், நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

மோட்ச தீபம்

பேட்டை வினைதீர்த்த விநாயகர் கோவில் முன்பு, பொதுமக்கள் 508 மோட்ச தீபம் ஏற்றினர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் ராணுவ வீரர்களின் உருவப்படத்திற்கு மலர்தூவி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் அழகுராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் காசிவிசுவநாதன் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் ‘பங்க்‘கள் நேற்று இரவு 15 நிமிடங்கள் மூடப்பட்டன. பெட்ரோல், டீசல் வினியோகத்தை நிறுத்தி துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Next Story