நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 17 Feb 2019 3:45 AM IST (Updated: 17 Feb 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

விளையாட்டு துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகையாக மாதம் ரூ.3,000 வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்பு, தேசிய அளவிலான போட்டிகளில் முதலிடம், 2-ம் இடம், 3-ம் இடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், அகில இந்திய பல்கலை கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச அல்லது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் அல்லது இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச அல்லது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் ஆகியவை விண்ணப்பிப்பதற்கு தகுதியான போட்டிகள் ஆகும்.

1.4.2018-ந் தேதியன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மத்திய அல்லது மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோருக்கான மாஸ்டர் ஸ்போர்ட் மிட் போன்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியில்லை. சர்வதேச போட்டிகளாயின் குறைந்தபட்சம் ஆறு நாடுகள் பங்கேற்று இருக்க வேண்டும். இளவயதில் பங்கேற்ற அல்லது வெற்றி பெற்ற போட்டிகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். அழைப்பு அல்லது நினைவு அல்லது ஓபன் போன்ற போட்டிகள் இளைஞர் திருவிழா அல்லது இளைஞர் பரிமாற்றம் போன்ற நிகழ்வுகளில் நடத்தப்படும் போட்டிகள் தகுதியில்லை.

தகுதி போட்டியின்றி நேரடியாக தேசிய மற்றும் பன்னாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு தகுதியில்லை. விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய விளையாட்டு சான்றிதழ் நகலுடன், மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 21-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் விளையாட்டு சான்றிதழ்களின் நகலை உண்மை சான்றிதழுடன் மாவட்ட விளையாட்டு அலுவலரை சந்தித்து நேரடியாக ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். வருகிற 21-ந் தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்று கொள்ளப்படமாட்டாது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story