கிணத்துக்கடவு மேம்பாலத்தில் போக்குவரத்து எப்போது தொடங்கும்? தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமேலாளர் உதயசங்கர் பதில்
கிணத்துக்கடவு மேம்பாலத்தில் போக்குவரத்து எப்போது தொடங்கும்? என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமேலாளர் உதயசங்கர் பதில் அளித்தார்.
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவு வழியாக கோவை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தசாலை பொள்ளாச்சியில் இருந்து கோவைவரை உள்ள 26.85 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் கடந்த 2016–ம் ஆண்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்க்கு முதற் கட்டமாக தேசியநெடுஞ்சாலைத்துறை ஆணையம் ரூ.414.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதில் முதற்கட்டமாககிணத்துக்கடவில் 2 கிலோ 232 மீட்டரும், ஒத்தக்கால் மண்டபத்தில் 1 கிலோமீட்டர் 40 மீட்டரும், முள்ளுப்பாடி ரெயில்வே கேட்பகுதியில் 1 கிலோமீட்டரும் 132 மீட்டரும், மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது கிணத்துக்கடவு ஊருக்குள் அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமேலாளர் உதயசங்கர் கூறியதாவது :–
கோவை ஈச்சனாரி–பொள்ளாச்சி ஆச்சிப்பட்டிவரை 26.85 கிலோமீட்டர் தூரத்திற்க்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணி தடையில்லாமல் நடந்து வருகிறது. இதில் தற்போது 21 கிலோமீட்டர் தூரத்திற்கு 4வழிச்சாலை அமைக்கும் பணிகள் முடிவு பெற்றுள்ளது. மேலும் இந்தசாலைகளில் விபத்துக்களை தடுக்க சிக்னல்கள், சாலை ஓரத்தில் வாகனங்கள் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழாமல் இருக்க இரும்பு தடுப்புகள், சாலையின் இருபுறங்களில் உள்ள கிராமங்களுக்கு செல்ல வசதியாக இடைவெளிகள், மேலும் கிணத்துக்கடவு ஊருக்குள் அமைக்கப்பட்டுள்ள மேம்பால பணிகளும் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளன. இம்மாத இறுதியில் மேம்பாலத்தில் சாலை போக்குவரத்து தொடங்கும்.
அதன்பின் சர்வீஸ்சாலைகள் அமைக்கப்படும். கிணத்துக்கடவு ஊருக்குள் மேம்பாலத்தின் கீழ் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சில ஊர்களின் பெயரை வழிகாட்டும் பதாகைகளில் பிழையாக எழுதப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார்கூறினார்கள். அவைகளை விரைவாக சரிசெய்ய ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கிணத்துக்கடவு அருகே ஏழுரில் சுங்கச்சாவடி அமைக்கும் பணிகள்விரைவில் தொடங்கும். மேம்பால பணிகளை பொறுத்தவரை ஒத்தக்கால்மண்டபம் மலுமிச்சம்பட்டி, ஈச்சனாரி பகுதிகளில் மட்டும் பணிகள் முடிய வேண்டி உள்ளது. இந்தபணிகளையும் விரைவுபடுத்தியுள்ளோம். மேலும் பணிகள் ஆங்காங்கே நடைபெற்றுவருவதால் வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.