பொருளாதார குற்றங்கள் அதிகரிப்பு நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி பேச்சு


பொருளாதார குற்றங்கள் அதிகரிப்பு நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி பேச்சு
x
தினத்தந்தி 16 Feb 2019 11:00 PM GMT (Updated: 16 Feb 2019 8:38 PM GMT)

பொருளாதார குற்றங்கள் அதிகரிப்பது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.

கோவை,

பொருளாதார குற்றங்கள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்த தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கம் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தமிழ்நாடு நீதித்துறை அகாடமியில் நேற்று தொடங்கியது. விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி மற்றும் சென்னை, மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நீதிபதிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:–

பொருளாதார குற்றங்கள், நிதி திட்டத்திற்கு மட்டுமின்றி, நாட்டின் நேர்மைக்கும், இறையாண்மைக்கும் பாதிப்பு விளைவிக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பொருளாதார குற்றங்கள் தடையாக உள்ளதாக 29–வது சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. ஒப்பந்தம், உரிமம் பெறுவதற்கு அரசு அதிகாரிகளை தவறாக பயன்படுத்துவது, அரசுக்கு சொந்தமான நில ஆக்கிரமிப்புகள் ஆகியவைகளும் பொருளாதார குற்றங்களாகும்.

பங்குச்சந்தை மோசடி, கள்ளச்சந்தை, கடத்தல், கலப்படம், நில அபகரிப்பு, போதைப்பொருள் கடத்தல், காப்பீட்டு மோசடி, மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்துவது சமூக பொருளாதார குற்றங்களாகும்.

அதிகாரத்தில் இருப்பவர்களால் செய்யப்படும் ‘ஒயிட் காலர் குற்றம்’ பொருளாதார குற்றங்களில் வருகிறது. இதுவரை பொருளாதார குற்றங்கள் வரையறுக்கப்படவில்லை என்றாலும், கடந்த 2014–ல் தேசிய குற்ற ஆவண காப்பகம் 24 வகையான பொருளாதார குற்றங்கள் என சொல்லப்பட்டதில் வரி ஏய்ப்பு முதன்மையாக உள்ளது. பொருளாதார குற்றங்கள் அதிகரிப்பு நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த வழக்குகளை விரைந்து முடிக்கவும், வழக்கு சாட்சியங்களை ஆராயவும் பொருளாதார குற்றங்கள் தொடர்பாக நீதிபதிகள் அறிந்து கொள்ள வேண்டும். கணினி தொழில் நுட்பங்களை மட்டுமே வைத்துக்கொண்டு பொருளாதார குற்றங்களில் எளிதாக ஈடுபடுகின்றனர். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் நமது நாட்டு ராணுவ வீரர்கள் 40 பேர் பலியானது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 40 பேரின் குடும்பங்கள் அனாதையாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி பேசும்போது கூறியதாவது:–

பொருளாதார குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற கருத்தரங்கு நீதிபதிகள், நீதித்துறை அலுவலர்கள் பொருளாதார குற்றங்கள் தொடர்பாகவும், அதனை தடுக்க எடுக்கப்பட வேண்டிய வழிமுறைகள், புதிய சட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள உதவும். நீதிபதிகள், நீதித்துறை சார்ந்தவர்கள் புதிய தகவல்களை அறிந்து தங்களை மேம்படுத்தி கொள்ளவேண்டும். குற்றங்களில் பொருளாதார குற்றங்கள் மிகவும் அபாயகரமானது. தனி நபரை மட்டுமின்றி சமுதாயத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. பொருளாதார குற்றங்களில் நம்பிக்கை மோசடி அதிகரித்து வருகிறது.

பொருளாதார குற்றங்களில் பதுங்கி வாழும் குற்றவாளிகள் சட்டவிரோத பொருட்களை வர்த்தகம் செய்ய வழிவகுக்கிறது. வரி ஏய்ப்பு, கள்ளச்சந்தை, மின்னணு மோசடிகள், நிதி நிறுவன மோசடிகள் என பொருளாதார குற்றங்களின் பரிமாணங்கள் விரிவடைந்து வருகிறது. நுட்பமான தொழில் நுட்பம், வழிமுறைகளை புதிது புதிதாக பொருளாதார குற்றங்களில் ஈடுபடுபவர்களால் கையாளப்படுகிறது. இதனை எதிர்கொள்ள இந்த கருத்தரங்கம் மிகவும் உதவும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைதொடர்ந்து நீதித்துறை அகாடமி மலரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி வெளியிட்டார். கருத்தரங்கில் ஐகோர்ட்டு நீதிபதிகள் மணிகுமார், வினித் கோத்தாரி,,கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், நீதித்துறை அகாடமி இயக்குனர் சந்திரசேகரன், சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் குமரப்பன் உள்பட பலர் பேசினார்கள். முடிவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் நன்றி கூறினார்.

முன்னதாக காஷ்மீரில் கார் குண்டு வெடிப்பில் பலியான 40 ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


Next Story