குந்தா அணையில் இருந்து கெத்தை அணைக்கு தண்ணீர் செல்லும் சுரங்கப்பாதையில் சீரமைப்பு பணி தீவிரம்


குந்தா அணையில் இருந்து கெத்தை அணைக்கு தண்ணீர் செல்லும் சுரங்கப்பாதையில் சீரமைப்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 17 Feb 2019 4:15 AM IST (Updated: 17 Feb 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

குந்தா அணையில் இருந்து கெத்தை அணைக்கு தண்ணீர் செல்லும் சுரங்கப்பாதையில் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா நீர்மின் திட்டங்களின் கீழ் 12 நீர்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அதன்படி அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு நீர்மின் நிலையங்களில் தினமும் மொத்தம் 834 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

குந்தா நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள அப்பர்பவானி அணையில் இருந்து அவலாஞ்சி நீர்மின் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் மின் உற்பத்திக்கு பிறகு அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகளில் தேக்கி வைக்கப்படுகிறது. அங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் குந்தா நீர்மின் நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, அங்கு 60 மெகா வாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் குந்தா அணையில் தேக்கி வைக்கப்படும். பின்னர் குந்தா அணையில் உள்ள சுரங்கப்பாதை வழியாக கெத்தை நீர்மின் நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, அங்கு 150 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் பரளி மின் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு 180 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதற்கிடையில் குந்தா, கெத்தை மற்றும் பரளி நீர்மின் நிலையங்களின் மின் உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாக குந்தா மற்றும் கெத்தை அணைகள் உள்ளன. ஆனால் இந்த அணைகளை தூர்வாராததால் சேறு தேங்கி உள்ளது. அணைகளில் நீர்வரத்து அதிகரிக்கும்போது கரையோரங்களில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து மண், மரம், செடி, கொடிகள் தண்ணீரில் அடித்து வரப்படுகிறது. இவ்வாறு குந்தா மற்றும் கெத்தை அணைகளில் 50 சதவீதத்துக்கும் மேல் சேறு, சகதியுடன் கழிவுகளும் தேங்கி உள்ளன. இதனால் குறைந்தபட்ச மழை பெய்தாலே அணைகள் நிரம்பி விடுகிறது. மேலும் சேறு, சகதியால் குந்தா அணையில் உள்ள சுரங்கப்பாதையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பால் கெத்தை நீர்மின் நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் தடை ஏற்பட்டு, மின் உற்பத்தி பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் அணைகள் மறு சீரமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஜனவரி மாதத்தில் குந்தா மற்றும் கெத்தை அணைகளில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து 2–வது கட்டமாக குந்தா அணையில் உள்ள சுரங்கப்பாதையை சீரமைக்க மின்வாரியம் முடிவு செய்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு குந்தா அணை திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று மின்வாரிய அதிகாரிகள் தலைமையில் 80–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணையில் இறங்கி சுரங்கப்பாதையை சுற்றி தேங்கி உள்ள சேறு, சகதி மற்றும் கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுரங்கப்பாதை சீரமைப்பு பணி காரணமாக கெத்தை, பரளி மற்றும் குந்தா நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story