தமிழகத்தில் நீர்பாசனத்துக்கு தனி அமைச்சகம் நல்லசாமி வலியுறுத்தல்
தமிழகத்தில் நீர்பாசனத்துக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி வலியுறுத்தி உள்ளார்.
ஊட்டி,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி ஊட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வருகிற பாராளுமன்ற தேர்தலில் இலவசங்களை முன்நிறுத்தி தேர்தலை சந்திக்க முற்படும் கட்சிகள் பிற்போக்கு சக்திகள் ஆகும். இந்த அநாகரீக அரசியலை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். இதனால் விவசாயிகள் பயன் அடைவார்கள். ஒடிசா மாநிலத்தில் கடற்கரை மாவட்டமான பத்ரக்கில் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க ஆங்கிலேயர் காலத்தில் இருந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அந்த மாவட்டத்தின் நீர்வளம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடற்கரை மாவட்டங்களில் இந்த தடை இல்லாததால் 25 கிலோ மீட்டர் அளவிற்கு நிலத்தடிக்குள் கடல்நீர் புகுந்து விட்டது. எனவே கடலோர மாவட்டங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு தடை விதிக்க வேண்டும். கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் நீர் பாசனத்திற்கு என்று தனி அமைச்சகம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் நீர் பாசனம் இருந்து வருகிறது. ஆகவே பொதுப்பணித்துறையில் இருந்து நீர் பாசனத்தை விடுவித்து, தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்.
அரசியல் கட்சிகள் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள இலவசங்களை அறிவிப்பது நடைமுறையில் உள்ளது. இதனால் நாட்டின் கடன் தொகை அதிகரித்து பேராபத்தை உண்டாக்கும். தேசிய கட்சிளானாலும், மாநில கட்சிகளானாலும், இடதுசாரி மற்றும் முற்போக்கு கட்சிகளானாலும் கொள்கை இல்லாத கூட்டணியை வைக்க உள்ளது. இது சந்தர்ப்பவாத கூட்டணி. எனவே கொள்கையுடன் கூட்டணி அமைத்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரமும், மாநில அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரமும் வழங்குவதாக அறிவித்து உள்ளது.
அதேபோல் ஆந்திரா மாநிலத்தில் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு அனைத்து விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்குவதாக அறிவித்து உள்ளார். இந்த தொகை மக்களுக்கு முழுமையாக சென்றடையாது என ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது. ஆகவே விவசாயிகளுக்கு முழுமையான தொகை சேரும்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது. காஷ்மீர் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலிக்கு காரணமான பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.