தனது காதலிக்கு, காதல் கடிதம் கொடுத்ததால் ஆத்திரம்: தனியார் நிறுவன ஊழியர் கொலை காதலன்- சகோதரருக்கு வலைவீச்சு


தனது காதலிக்கு, காதல் கடிதம் கொடுத்ததால் ஆத்திரம்: தனியார் நிறுவன ஊழியர் கொலை காதலன்- சகோதரருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Feb 2019 3:45 AM IST (Updated: 17 Feb 2019 3:07 AM IST)
t-max-icont-min-icon

தனது காதலிக்கு, காதல் கடிதம் கொடுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தனியார் நிறுவன ஊழியரை கொலை செய்த காதலன், அவரது சகோதரரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு, 

தனது காதலிக்கு, காதல் கடிதம் கொடுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தனியார் நிறுவன ஊழியரை கொலை செய்த காதலன், அவரது சகோதரரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

காதல் கடிதம்

கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா திருமணஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 28). இவர் பெங்களூரு காடுகோடி பகுதியில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இதுபோல திருமணஹள்ளி அருகே தயலூருவில் வசித்து வருபவர் தேவராஜ். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேவராஜின் காதலிக்கு, ராமமூர்த்தி காதல் கடிதம் கொடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த தேவராஜ் கடும் ஆத்திரம் அடைந்தார்.

கழுத்தை இறுக்கினர்

தனது காதலிக்கு காதல் கடிதம் கொடுத்த ராமமூர்த்தியை தீர்த்து கட்ட தேவராஜ் முடிவு செய்தார். இதுகுறித்து அவர் தனது சகோதரர் சுனிலிடம் கூறினார். அவரும் ராமமூர்த்தியை தீர்த்துக்கட்ட உதவுவதாக கூறினார். இந்த நிலையில் ராமமூர்த்தியை தொடர்பு கொண்டு பேசிய தேவராஜ் உன்னிடம் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது காடுகோடியில் உள்ள வீட்டிற்கு வரும்படி தேவராஜை, ராமமூர்த்தி அழைத்ததாக தெரிகிறது.

இதையடுத்து அங்கு தேவராஜும், சுனிலும் சென்றார்கள். அங்கு சென்றதும் தேவராஜ், சுனில், ராமமூர்த்தி ஆகிய 3 பேரும் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.அப்போது தனது காதலிக்கு காதல் கடிதம் கொடுத்தது பற்றி தேவராஜ், ராமமூர்த்தியிடம் கேட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது தேவராஜும், சுனிலும் சேர்ந்து ராமமூர்த்தியின் கழுத்தை துண்டால் இறுக்கினர். இதில் மூச்சுத்திணறிய அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து தேவராஜும், சுனிலும் தப்பி சென்று விட்டார்.

வலைவீச்சு

இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் ராமமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள தேவராஜ், அவரது சகோதரர் சுனிலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story