பயங்கரவாத தாக்குதலில் பலியான துணை ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி; மனைவிக்கு அரசு வேலை


பயங்கரவாத தாக்குதலில் பலியான துணை ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி; மனைவிக்கு அரசு வேலை
x
தினத்தந்தி 17 Feb 2019 5:00 AM IST (Updated: 17 Feb 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் உடலுக்கு முதல்-மந்திரி குமாரசாமி நேற்று அஞ்சலி செலுத்தினார்.

பெங்களூரு, 

பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் உடலுக்கு முதல்-மந்திரி குமாரசாமி நேற்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் குமாரசாமி அறிவித்துள்ளார்.

உடலுக்கு குமாரசாமி அஞ்சலி

காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவப்படை வீரர்கள் சென்ற பஸ் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி பயங்கரவாதிகள் வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் 40 வீரர்கள் பலியானார்கள். அவர்களில் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா குடிகேரி கிராமத்தை சேர்ந்த குரு (வயது 33) என்பவரும் வீரமரணம் அடைந்திருந்தார். அவரது உடல் டெல்லியில் இருந்து நேற்று மதியம் 12.45 மணியளவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வீரர் குருவின் உடலுக்கு முதல்-மந்திரி குமாரசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்பு முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

ரூ.25 லட்சம் நிதி உதவி

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த குரு வீரமரணம் அடைந்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். வீரர் குருவின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு சார்பில் ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கப்படும். குருவின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும். இது அரசின் பொறுப்பாகும்.

குருவின் உடலை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மண்டியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுவிக்கப்பட்டது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஹெலிகாப்டரில் கொண்டு செல்ல முடியவில்லை. ராணுவத்திற்கு சொந்தமான வாகனத்தில் அவரது உடல் உரிய பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது.

இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

Next Story