கர்நாடகத்தில் வருகிற 20-ந் தேதிக்கு பின்பு அரசு அதிகாரிகள் இடமாற்றத்திற்கு தடை தேர்தல் ஆணையம் உத்தரவு


கர்நாடகத்தில் வருகிற 20-ந் தேதிக்கு பின்பு அரசு அதிகாரிகள் இடமாற்றத்திற்கு தடை தேர்தல் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 17 Feb 2019 4:30 AM IST (Updated: 17 Feb 2019 3:21 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் வருகிற 20-ந் தேதிக்கு பின்பு அரசு அதிகாரிகள் இடமாற்றத்திற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் வருகிற 20-ந் தேதிக்கு பின்பு அரசு அதிகாரிகள் இடமாற்றத்திற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஒரே கட்டமாக தேர்தல்

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதா ஆட்சி 5 ஆண்டுகளையும் நிறைவு செய்ய உள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் இறுதியில் அல்லது மே மாதம் தொடக்கத்தில் நடைபெறலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் இப்போதில் இருந்தே தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதி அடுத்த மாதம் (மார்ச்) 2-வது வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது நாடாளுமன்றத்தில் உள்ள 543 தொகுதிகளுக்கும் 8 முதல் 10 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருவதாக தெரிகிறது. அதன்படி, கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிகாரிகள் இடமாற்றத்திற்கு தடை

இந்த நிலையில், மத்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் நரேந்திரா.எஸ்.புடோலியா, கர்நாடக மாநில தலைமை செயலாளர் விஜய பாஸ்கருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் வருகிற 20-ந் தேதிக்கு பின்பு மாநிலத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்யக்கூடாது என்றும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து ஒரே இடத்தில் 4 ஆண்டுகளாக பணியாற்றும் அதிகாரிகளை மாற்றுவது தொடர்பாக முதல்-மந்திரி குமாரசாமி, சம்பந்தப்பட்ட துறை மந்திரிகளின் கவனத்திற்கு எடுத்து செல்ல தலைமை செயலாளர் விஜய பாஸ்கர் தீர்மானித்துள்ளார். மேலும் தேர்தல் ஆணையம் உத்தரவை தொடர்ந்து, நாளை (திங்கட்கிழமை) ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த உயர் அதிகாரிகளுடன், தலைமை செயலாளர் விஜய பாஸ்கர் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஏப்ரல் 15-ந் தேதி...

மத்திய தேர்தல் ஆணையத்தின் கடிதம் மூலம் கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 15-ந் தேதி அல்லது 17-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏனெனில் கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பி.யூ.சி இறுதி ஆண்டுக்கான தேர்வுகள் ஏப்ரல் மாதம் முதல் வாரத்திற்குள் நிறைவு பெற்றுவிடும். இதனால் ஏப்ரல் 15 அல்லது 17-ந் தேதியில் கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Next Story