அங்கன்வாடியில் பணியாற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
அங்கன்வாடி பணியாளர் பதவிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாகவுள்ள 71 முதன்மை அங்கன்வாடி மைய பணியாளர், 45 குறு அங்கன்வாடி மைய பணியாளர், 108 அங்கன்வாடி மைய உதவியாளர் காலிபணியிடங்களை நிரப்பிட பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதில் முதன்மை மற்றும் குறு அங்கன்வாடி மைய பணியாளருக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1.2.2019 அன்று 25 வயது முடிந்து 35 வயதிற்கு மிகாதவர்களாக இருக்கவேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர், மலைப்பகுதியில் வசிக்கும் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. இதில் விண்ணப்பதாரர்கள் 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மலைப்பகுதி விண்ணப்பதாரர்கள் 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் காலி பணியிடம் சார்ந்த அதே கிராமத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். தகுதியான நபர் அதே கிராமத்தில் இல்லாவிடில் அதே கிராம பஞ்சாயத்தை சேர்ந்த அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவரை தேர்ந்தெடுக்கலாம். குறிப்பிடப்பட்ட கிராம பஞ்சாயத்தில் தகுதியான நபர் கிடைக்கப் பெறாவிடில் 10 கி.மீ. தொலைவிற்கு உட்பட்ட அருகிலுள்ள பஞ்சாயத்தை சேர்ந்தவரை தேர்ந்தெடுக்கலாம்.
நகர்ப்புறங்களில் அங்கன்வாடி பணியாளர் அதே வட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். தகுதியான நபர் அதே வட்டத்தில் இல்லாவிடில் அருகிலுள்ள வார்டினை சேர்ந்தவரை தேர்ந்தெடுக்கலாம். தகுதியான நபர் அருகிலுள்ள வட்டத்திலும் இல்லாத பட்சத்தில் அதே கோட்டத்தை சேர்ந்தவரை தேர்ந்தெடுக்கலாம். வசிப்பிட ஆதாரமாக வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி ரசீது, குடும்ப அட்டை, ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்று இணைக்கப்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பராமரிக்க தகுதி வாய்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். அரசாணைப்படி 4 சதவீத இடஒதுக்கீட்டில் பணி நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல அங்கன்வாடி உதவியாளர் பணி விண்ணப்பதாரர்கள் 1.2.2019 அன்று 20 வயது முடிவுற்று 40 வயதுக்கு மிகாதவர்களாகஇருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் மலைப்பகுதி விண்ணப்பதாரர்கள், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. எழுதப் படிக்கத் தெரிந்தால் போதுமானது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் இதற்கும் பொருந்தும்.
விண்ணப்பதாரர்கள் காலிபணியிட விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட திட்ட அலுவலர் குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சிவகங்கை அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தை நகல் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வருகிற 22–ந்தேதி மாலை 5 மணி வரை அலுவலக வேலை நேரத்தில் (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர) சம்பந்தப்பட்ட குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் கொடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.