லாரி மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்ற 25 டன் அரிசி பறிமுதல்


லாரி மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்ற 25 டன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 17 Feb 2019 4:00 AM IST (Updated: 17 Feb 2019 3:40 AM IST)
t-max-icont-min-icon

லாரி மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்ற 25 டன் அரிசியை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டத்தின் கம்பம்மெட்டு, போடிமெட்டு வழியாகவும், குமுளி மலைப்பாதை, தேவாரம் சாக்குலூத்துமெட்டு வழியாகவும் கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்திச்செல்லப்படுவதாக கலெக்டர் பல்லவி பல்தேவுக்கு புகார் வந்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக வருவாய்த்துறை மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தமிழக-கேரள எல்லைப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இருந்து தேனி வழியாக கேரளாவுக்கு சென்றுகொண்டிருந்த லாரியில் அரிசி மூட்டைகள் ஏராளமாக இருப்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. மேலும் அந்த லாரி, குமுளி மலைப்பாதை வழியாக கேரளாவுக்கு செல்வதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் உத்தமபாளையம் பறக்கும்படை துணை தாசில்தார் ஜாகீர்உசேன், வட்ட வழங்கல் அலுவலர் மோகன்முனியாண்டி, ஆய்வாளர் பாலசுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் குமுளி மலைப்பாதையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். லோயர் கேம்ப் அருகே வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது அதில் 25 டன் அரிசி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து உத்தமபாளையம் நுகர்பொருள் வாணிப கழக வளாகத்தில் நிறுத்தினர். தொடர்ந்து லாரி டிரைவர்களான திருச்செங்கோட்டை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 40), ராஜ்குமார் (36) ஆகியோரிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து திருச்செங்கோட்டுக்கு அரிசி மூட்டைகளை கொண்டுவந்து பின்னர் தேனி வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அரிசி மூட்டைகளில் இருப்பது ரேஷன் அரிசி தானா? என்று வருவாய்த்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து தேனி உணவு தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் மூலம் லாரியில் இருப்பது ரேஷன் அரிசி தானா? என வருவாய்த்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் ரேஷன் அரிசியா? என்ற சந்தேகம் உள்ளது. அதை உறுதிப்படுத்துவதற்காக உணவு தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சோதனையில் முடிவில் தான் அவை ரேஷன் அரிசி தானா? என்பது தெரியவரும் என்றனர்.

Next Story