பராமரிப்பு பணி முடிந்து பழனி கோவிலில் ரோப்கார் சேவை தொடக்கம்


பராமரிப்பு பணி முடிந்து பழனி கோவிலில் ரோப்கார் சேவை தொடக்கம்
x
தினத்தந்தி 17 Feb 2019 3:00 AM IST (Updated: 17 Feb 2019 3:40 AM IST)
t-max-icont-min-icon

மாதாந்திர பராமரிப்பு பணி முடிந்து சிறப்பு பூஜையுடன் நேற்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை தொடங்கப்பட்டது.

பழனி,

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு திருவிழா மட்டுமின்றி நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவைரெயில், ரோப்கார் ஆகியவற்றின் வழியே மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

இதில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு விரைவாக செல்ல ரோப்கார் முதலிடத்தை பிடிக்கிறது. அதன்படி 3 நிமிடத்தில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு ரோப்காரில் செல்ல முடியும். இதனாலேயே பக்தர்கள் அதிகளவு ரோப்கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

ரோப்கார் சேவை தினசரி, மாதத்தில் 2 நாட்கள் மற்றும் ஆண்டுக்கு ஒரு மாதம் என்ற அளவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி மாதாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த 14, 15 ஆகிய 2 நாட்கள் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரோப்காரில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி மேல் தளத்தில் உள்ள சுழலும் சக்கரத்தில் ரப்பர், லைனர் ஆகியவை புதிதாக மாற்றப்பட்டன. மேலும் ஒரு பெட்டி சீரமைப்பு செய்து இணைக்கப்பட்டது. இதையடுத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. பின்னர் நேற்று காலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு ரோப்கார் சேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பக்தர்கள் ரோப்காரில் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். 

Next Story