பெண்ணாடம் அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் 15 நாட்களாக காத்திருப்பதால் விவசாயிகள் கவலை


பெண்ணாடம் அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் 15 நாட்களாக காத்திருப்பதால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 17 Feb 2019 3:45 AM IST (Updated: 17 Feb 2019 5:16 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இதன் காரணமாக 15 நாட்களுக்கும் மேலாக காத்திருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பெண்ணாடம்,

பெண்ணாடம் அடுத்த திருமலை அகரத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு அகரம், நந்திமங்கலம், வடகரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் சாகுபடி செய்த நெல்லை அறுவடை செய்து மூட்டைகளில் கொண்டு வந்து, விற்பனை செய்து விட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது விவசாயிகள் விற்பனை செய்வதற்காக சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகளை நேரடி கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் கடந்த 15 நாட்களுக்கு மேலாக நேரடி கொள்முதல் நிலையத்திலேயே காத்திருக்கின்றனர்.

நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து இருப்பது பற்றி கொள்முதல் நிலைய பணியாளர்களிடம் கேட்டபோது, விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை வாங்கினால் அவற்றை எடுத்து வைப்பதற்கு சாக்குப்பைகள் இல்லை. சாக்குப்பைகள் எப்போது வருகிறதோ அப்போது தான் நெல் மூட்டைகளை வாங்க முடியும் என தெரிவித்தனர்.

இதனால் விவசாயிகள் நெல் மூட்டைகளுக்கு காவலாக அங்கேயே காத்துக்கிடக்கின்றனர். இதனால் அவர்கள் கவலை அடைந்து ள்ளனர். இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story