விழுப்புரம் ரெயில் நிலையத்தில் புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணி தொடங்கியது
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
விழுப்புரம்,
தமிழகத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகவும் சென்னை, கோவை, திருச்சி போன்ற ரெயில் நிலையங்களுக்கு அடுத்தபடியாகவும் விளங்கி வருவது விழுப்புரம் ரெயில் நிலையம். இங்கிருந்து சென்னை, மதுரை, திருப்பதி, மயிலாடுதுறை, வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுவதுடன் சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவனந்தபுரம், குருவாயூர், மும்பை போன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் விழுப்புரம் ரெயில் நிலையம் வந்து செல்கின்றன.
இதனால் இந்த ரெயில் நிலையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருவதால் எந்நேரமும் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்நிலையில் தென்னக ரெயில்வே நிர்வாகத்தின் உத்தரவின்படி விழுப்புரம் ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரெயில் நிலைய 5-வது நடைமேடையில் உள்ள ஆங்கிலேயர் கால பழைய கட்டிடங்களின் மேற்கூரை சிமெண்டு காரைகளை பெயர்த்தெடுத்து கட்டிடங்களை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
அதேபோல் இந்த நடைமேடையில் உள்ள தண்டவாளங்கள் மிகவும் தாழ்வாக உள்ளதாலும், இந்த தண்டவாளங்கள் அமைத்து பல ஆண்டுகள் ஆவதாலும் இதனை உயர்த்தி புதிய தண்டவாளங்கள் அமைக்க தென்னக ரெயில்வே முடிவு செய் தது.
இந்த பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.98 லட்சம் ரெயில்வே துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இங்குள்ள நடைமேடையில் 530 மீட்டர் நீளத்திற்கு புதிய தண்டவாளங்கள் அமைப்பதற்காக பழைய சிலிப்பர் கட்டைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும் புதிய தண்டவாளங்கள் அமைக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story