நேருயுவகேந்திரா சார்பில் 40 இளைஞர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்
நேருயுவகேந்திரா சார்பில் 40 இளைஞர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
கடலூர்,
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல் படும் நேருயுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான கலை விழா, இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் மாவட்ட அளவிலான இளையோர் நாடாளுமன்றம் ஆகிய முப்பெரும் விழா கடலூர் டவுன்ஹாலில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவுக்கு நேருயுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஹெலன்ராணி தலைமை தாங்கினார். தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு, 40 இளைஞர் மன்றங்களுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
பின்னர் மாவட்ட கலை விழாவில் முதல் மூன்று இடங்களை பிடித்த கலைக்குழுவினருக்கு பரிசுகளையும், கலந்து கொண்ட அனைத்து குழுவினருக்கும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
மேலும் நேருயுவகேந்திரா சார்பில் நடைபெற்ற திறன்மேம்பாட்டு பயிற்சிகளான தையல் பயிற்சி, அழகுகலை பயிற்சி முடித்த 100 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவில் முன்னாள் நகரசபை தலைவர் குமரன், துணைத்தலைவர் சேவல் குமார், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆர்.வி.ஆறுமுகம், பழனிசாமி, கந்தன், தமிழ்செல்வன், ஏழுமலை, அன்பு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், விளையாட்டு அதிகாரி ராஜா, தூய்மை பாரத ஒருங்கிணைப்பாளர் ராச.வேலுமணி, ஜோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நேருயுவகேந்திரா கணக்காளர் புஷ்பலதா வரவேற்று பேசினார். முடிவில் இளையோர் சேவை தொண்டர் கிரிஜா நன்றி கூறினார்.
முன்னதாக காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்களுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
Related Tags :
Next Story