காஷ்மீர் தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி மும்பை, தானேயில் கடையடைப்பு ரெயில் மறியல்; போலீஸ் தடியடி
காஷ்மீரில் உள்ள புலவாமா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை துணை ராணுவத்தினர் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
மும்பை,
காஷ்மீரில் உள்ள புலவாமா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை துணை ராணுவத்தினர் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
பொதுமக்கள் அஞ்சலி
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இந்தநிலையில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து மும்பை, தானே, நவிமும்பை, பால்கர் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள், டாக்சி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடைகள் அடைக்கபட்டன.
மும்பையில்...
தாராவி சயான் - பாந்திரா லிங் ரோட்டில் கடைகளை அடைத்த வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தாராவி மெயின் ரோட்டில் நகை கடைகள் அடைக்கப்பட்டன. மாட்டுங்கா லேபர் கேம்ப் பகுதியில் டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செம்பூரில் நேற்று முன்தினம் இரவு இந்திய குடியரசு கட்சி சார்பில், அதன் தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே தலைமையில் பாகிஸ்தான் கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று மும்பையில் பிரபலமான மாாக்கெட் பகுதிகளான மனிஷ் மார்கெட், சைனா பஜார், அப்துல் ரகுமான் ரோடு, ஜவேரி நகைக்கடை பஜார், தாதர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. ஒர்லி ஜிஜா மாதா பகுதியில் பொதுமக்கள் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர்.
இதேபோல எஸ்.ஐ.இ.எஸ். உள்ளிட்ட மும்பையில் உள்ள பல்வேறு கல்லூரி, பள்ளிகளில் மாணவர்கள் பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தானே
தானே மாவட்டம் மும்ராவில் கடைகள் அடைக்கப்பட்டன. ஆட்டோக்கள் ஓடவில்லை. வசாயில் சிவசேனாவினர் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
இதையடுத்து அங்கு நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் ஆட்டோ, டாக்சி டிரைவர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பந்த் காரணமாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.
ரெயில் மறியல் போராட்டம்
பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா ரெயில் நிலையத்தில் பாரதீய சேனா அமைப்பினர் உள்பட பல அமைப்புகள் சேர்ந்து நேற்று காலை ரெயில் நிலையத்தில் குவிந்தனர். பின்னர் மும்பை நோக்கி செல்லும் ரெயிலை மறித்து போராட்டத்தில் குதித்தனர். இவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் கலந்து கொண்டதால் தண்டவாள பகுதி மக்கள் வெள்ளத்தில் நிறைந்தது. பொதுமக்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த திடீர் ரெயில் மறியல் போராட்டத்தால் ரெயில் போக்குவரத்து முடங்கியது.
ரெயில்வே போலீசார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு போலீசார் லேசான தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.
இதன்பிறகு அங்கு மீண்டும் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. காலை நேரத்தில் ரெயில்சேவை பாதிக்கப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
கல்வீச்சு
இதேபோல தகானுவில் இருந்து சர்ச்கேட் நோக்கி புறப்பட்ட மின்சார ரெயில் மீது ஒருகும்பல் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் உள்ளே இருந்த பயணிகள் ரெயில் கதவை மூடி கொண்டனர்.
இது பற்றி அறிந்த போலீசார் கல்வீச்சில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து லேசான தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர்.
Related Tags :
Next Story