மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்பு தானம் மின்சார ரெயிலில் பயணித்த கல்லீரல் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க புது முயற்சி
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானத்தை தொடர்ந்து, அவரது கல்லீரல் மின்சார ரெயிலில் கொண்டு வரப்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
மும்பை,
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானத்தை தொடர்ந்து, அவரது கல்லீரல் மின்சார ரெயிலில் கொண்டு வரப்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
மூளைச்சாவு
தானே மாவட்டம் உல்லாஸ்நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த 13-ம் தேதி மருத்துவ முகாம் நடந்தது. இதில் கலந்து கொள்ள சமூக ஆர்வலர் பாரத் காரே (வயது 53) ஸ்கூட்டரில் சென்ற போது கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவர் டோம்பிவிலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
சிகிச்சையின் போது அவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக தானேயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
உடல் உறுப்பு தானம்
இதையடுத்து அவரின் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். அதன்படி அவரின் 2 சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் தானமாக பெறப்பட்டது. இதில் சிறுநீரகங்கள் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றுக்கும், சயானில் உள்ள ஆஸ்பத்திரிக்கும் அனுப்பப்பட்டது.
மேலும் அவரின் கல்லீரல் மும்பை பரேலில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு பொறுத்த முடிவு செய்யப்பட்டது. இதில் மும்பையின் கிழக்கு விரைவு சாலை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் புறநகர் மின்சார ரெயிலில் கல்லீரலை கொண்டு செல்ல டாக்டர்கள் திட்டமிட்டனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
மின்சார ரெயிலில்...
அதன்படி தானே தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து பகல் 2.57 மணியளவில் டாக்டர்கள் குழு குளிரூட்டப்பட்ட சிவப்பு பெட்டியில் கல்லீரலை வைத்து தானே ரெயில் நிலையம் சென்றனர். பின்னர் 3.08 மணிக்கு கர்ஜத்தில் இருந்து சி.எஸ்.எம்.டி. நோக்கி வந்த மின்சார விரைவு ரெயிலின் முதல் வகுப்பு பெட்டியில் டாக்டர்கள் குழுவினர் கல்லீரலுடன் பயணம் செய்தனர். மேலும் இதுகுறித்து தாதர் ரெயில் நிலைய மேலாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதன்படி தாதர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் தயார் நிலையில் இருந்தனர். ரெயில் தாதர் நிலையத்தின் 6-வது பிளாட்பாரத்திற்கு வந்ததும் ரெயில்வே போலீஸ் பாதுகாப்புடன் டாக்டர்கள் ரெயில் நிலையத்திற்கு வெளியே தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் பரேலில் உள்ள ஆஸபத்திரிக்கு சென்றனர். பின்னர் அந்த கல்லீரல் நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. 38 நிமிடங்களில் தானே ஆஸ்பத்திரியில் இருந்து பரேலுக்கு கல்லீரல் கொண்டு வரப்பட்டது.
உடல் உறுப்புகள் தானத்திற்காக மின்சார ரெயிலில் கொண்டு செல்லப்பட்டது இதுவே முதல் முறையாகும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த மும்பை நகரத்தில் மின்சார ரெயிலில் உடல் உறுப்புகள் கொண்டு செல்லப்படுவது நல்ல யோசனை என பொதுமக்கள் கூறினர். எனினும் மின்சார ரெயில்களில் உடல் உறுப்புகளை கொண்டு செல்வது பாதுகாப்பானதாக இருக்காது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story