பா.ஜனதாவுடன் சிவசேனா தேர்தல் கூட்டணி வைப்பது வெட்கக்கேடு: சுவாபிமானி கட்சி தனித்து போட்டியிடும் நாராயண் ரானே அறிவிப்பு


பா.ஜனதாவுடன் சிவசேனா தேர்தல் கூட்டணி வைப்பது வெட்கக்கேடு: சுவாபிமானி கட்சி தனித்து போட்டியிடும் நாராயண் ரானே அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Feb 2019 4:30 AM IST (Updated: 17 Feb 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

சிவசேனாவை கடுமையாக விமர்சித்த நாராயண் ரானே, நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார்.

மும்பை,

சிவசேனாவை கடுமையாக விமர்சித்த நாராயண் ரானே, நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார்.

முன்னாள் முதல்-மந்திரி

மகாராஷ்டிரா சுவாபிமானி என்ற கட்சியின் தலைவராக இருப்பவர் நாராயண் ரானே. கொங்கன் பகுதியில் பலமிக்க தலைவராக விளங்கும் நாராயண் ரானே, கடந்த 1995-ம் ஆண்டு சிவசேனா ஆட்சியமைத்த போது முதல்-மந்திரியாக பதவி வகித்தார்.

பின்னர் உத்தவ் தாக்கரேயுடன் மோதல் காரணமாக சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் மந்திரி பதவி வகித்து வந்த அவர், கடந்த 2017-ம் ஆண்டு மகாராஷ்டிரா சுவாபிமானி என்ற கட்சியை தொடங்கினார். இதையடுத்து பா.ஜனதா கூட்டணியில் இணைந்து செயல்பட்ட அவருக்கு, பா.ஜனதா சார்பில் ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்பட்டது.

தனித்து போட்டி

இந்த நிலையில் திடீர் திருப்பமாக நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக நாராயண் ரானே அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக மும்பையில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிரா சுவாபிமானி கட்சி தனித்து போட்டியிடபோகிறது. இனிமேல் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா- சிவசேனா கூட்டணியுடன் பயணிக்க போவதில்லை. நாங்கள் சுதந்திரமாக செயல்படபோகிறோம்.

காஷ்மீர் தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் கொல்லப்பட்டு இருப்பதை பற்றி சிறிதும் கவலைப்படாமல் பா.ஜனதாவும், சிவசேனாவும் கூட்டணிக்காக தொகுதி பங்கீடு பற்றி பேசி கொண்டிருக்கின்றனர்.

பாடம் புகட்ட வேண்டும்

இந்த கூட்டணி சுயநலத்துக்கானது. ஆளும் கட்சியான பா.ஜனதாவும் அதன் கூட்டணி கட்சியான சிவசேனாவும் மராட்டியத்தில் வலுவிழந்து விட்டன. தொடர்ந்து பா.ஜனதாவை விமர்சித்து வந்த சிவசேனா, தற்போது வெட்கமின்றி கூட்டணி குறித்து அக்கட்சியுடனே பேசி வருகிறது.

நாம் என்ன செய்தாலும் மக்கள் நமக்கு ஓட்டு போடுவார்கள் என்று சிவசேனா நினைக்கிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அவர்களுக்கு சவுக்கடி கொடுத்து பாடம் புகட்ட வேண்டும்.

இந்த தேர்தல் போட்டியில் 4 முக்கிய கட்சிகள் களம் இறங்கியுள்ளது. நாம் இந்த 4 கட்சியை விட வித்தியாசமானவர்கள்.

‘தாக்கரே’ படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. பால்தாக்கரேயின் இடத்தில் வேறொருவரை வைத்து பார்க்க என்னால் முடியவில்லை. பால்தாக்கரேயுடன் ஒப்பிட்டு பார்க்கையில் உத்தவ் தாக்கரே 5 சதவீதம் கூட அரசியல் அறிவு இல்லாதவர். ‘தாக்கரே’ படம் முழுக்க முழுக்க பால் தாக்கரேயின் பெயரை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story