கொங்கணாபுரத்தில் பருத்தி விலை குறைந்ததால் விவசாயிகள் முற்றுகை போராட்டம்


கொங்கணாபுரத்தில் பருத்தி விலை குறைந்ததால் விவசாயிகள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 17 Feb 2019 4:03 AM IST (Updated: 17 Feb 2019 4:03 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் பருத்தி விலை குறைந்ததால், கூட்டுறவு சங்க அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

எடப்பாடி,

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். ஏலத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொள்வது உண்டு.

அதேபோல் நேற்று நடந்த ஏலத்துக்கு விவசாயிகள் ஏராளமானோர் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த வாரம் நடந்த ஏலத்தில் பருத்தி குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 800 முதல் ரூ.6 ஆயிரம் வரை ஏலம் சென்றது. ஆனால் நேற்று நடந்த ஏலத்தில் பருத்தி விலை குறைந்தது. இதன்படி பருத்தி குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 300 முதல் ரூ.5 ஆயிரத்து 500 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. விலை குறைந்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே அங்கு நின்றிருந்த விவசாயிகள் திடீரென்று கொங்கணாபுரம் ரவுண்டானாவிற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். விவசாயிகளை போலீசார் சங்க அலுவலகத்துக்கு அழைத்து வந்து சங்க மேலாளர் மாதையன் தலைமையில் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது வியாபாரிகள் கூறும் போது, தற்போது மார்க்கெட்டில் நூல்பேல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், அதன் நிலவரத்திற்கு ஏற்ப தான் பருத்தியை கொள்முதல் செய்யமுடியும் என கூறினார்கள். இதைத்தொடர்ந்து சங்க மேலாளர், விவசாயிகளிடம் மறு ஏலம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறும் போது, கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலையை குறைத்து கேட்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story