எழுமலை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்


எழுமலை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Feb 2019 4:04 AM IST (Updated: 17 Feb 2019 4:04 AM IST)
t-max-icont-min-icon

எழுமலை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி,

எழுமலை அருகே உள்ளது, செல்லாயிபுரம். இந்த கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், ஏற்கனவே 2 முறை சாலைமறியல் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் தவித்து வந்த செல்லாயிபுரம் கிராம மக்கள் நேற்று சூலப்புரம்-டி.ராமநாதபுரம் சாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த டி.ராமநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்து, ராணி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.

கிராம மக்கள் கூறும்போது, எங்கள் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் சீராக வழங்கப்படுவது கிடையாது. இதனால் நாங்கள் வயல் வெளி, தோட்டங்களில் உள்ள கிணறுகளில் தண்ணீர் எடுத்து வந்து பற்றாக்குறையை போக்கினோம். ஆனால் கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்ததால் அங்கு தண்ணீர் இல்லை. இதனால் விலை கொடுத்து குடிநீர் வாங்கி வருகிறோம். அதிகாரிகளும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்காமல் மெத்தனம் செய்கிறார்கள். குடிநீர் இன்றி நாங்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். எனவே குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்றனர்.

அதன் பிறகு கிராம மக்களிடையே பேரையூர் மண்டல துணை வட்டாட்சியர் பால கிருஷ்ணன், சேடபட்டி ஒன்றிய ஆணையாளர் பாலகிருஷ்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிசங்கர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, இன்னும் 2 வாரங்களில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினை முற்றிலுமாக தீர்க்கப்படும். இதுசம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்படும். உத்தரவு கிடைத்த பிறகு அதற்குரிய நிதி திட்டத்தின்கீழ் ஆழ்துளை கிணறு அமைத்து முறையாக குடிநீர் வழங்கப்படும் என்றனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Next Story