‘நெய்யப்படாத துணிப்பைகள் பிளாஸ்டிக் வகையை சேர்ந்தது’ மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு
நெய்யப்படாத துணி போல காணப்படும் கைப்பைகளும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வகையை சேர்ந்தது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
மதுரை,
தமிழக அரசு சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக, கடந்த ஜனவரி மாதம் முதல் ஒரு உபயோகித்து, தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது. அதன்படி, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமலில் இருந்து வருகிறது. இதில், பாலிபுரோப்பிலின், பாலி எத்தலின் ஆகிய வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட அனைத்து வகையான பிளாஸ்டிக் பைகளும் அடங்கும். இதற்கு தடிமன் கூடுதல், குறைவு என்ற கணக்கீடு கிடையாது.
இதனால், பொதுமக்கள் கடைகள், கடைவீதிகளில் பிளாஸ்டிக் பைகள் இல்லாமல் திணறி வருகின்றனர். மதுரை மாவட்டத்தை பொறுத்தமட்டில், மஞ்சள் பை கலாசாரம் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இருப்பினும், தற்போது அனைத்து உணவகங்களிலும் ரூ.10 கட்டணத்தில் நெய்யப்படாத கைப்பைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுவும் பிளாஸ்டிக்கின் ஒருவகை என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் ராம்மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழக அரசு கடந்த மாதம் முதல் சுற்றுச்சூழல் மாசுபடாமல் தடுப்பதற்காக பொதுமக்கள் அன்றாடம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதித்துள்ளது.
ஆனால், பெரும்பாலான உணவகங்கள், மருந்து கடைகள், துணிக்கடைகளில் பாலிபுரோப்பிலின் வேதிப்பொருள் கொண்டு தயாரிக்கப்பட்ட நெய்யப்படாத பிளாஸ்டிக் பைகள் வலம் வருவது தெரியவந்தது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இந்த பைகளை சேகரித்து, மத்திய பிளாஸ்டிக் என்ஜினீயரிங் தொழில்நுட்ப கல்வி நிறுவன ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அதில், தற்போது உணவகங்களில் பயன்படுத்தப்படும் நெய்யப்படாத கைப்பைகள் பாலிபுரோப்பிலின் வேதிப்பொருளால் தயாரிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த கைப்பைகளும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வகையை சேர்ந்ததாகும். எனவே, இதுபோன்ற கைப்பைகளை தவிர்த்து சணல், துணி மற்றும் காகிதப்பைகளை உபயோகிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.