அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதிப்படும் சோதனைச்சாவடி போலீசார்
கம்பம்மெட்டு போலீஸ் சோதனைச்சாவடியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் போலீசார் அவதிப்பட்டு வருகின்றனர்.
கம்பம்,
தேனியில் இருந்து கேரள மாநில பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு ஆகிய பகுதிகள் வழியாக தான் செல்ல வேண்டும். இந்த வழித்தடங்கள் அனைத்தும் மலைப்பாதைகள் ஆகும். இந்த மலைப்பாதை வழியாக தினசரி ஆயிரக்கணக்கானோர் கேரள மாநிலத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வாகனங்களில் வேலைக்கு செல்கின்றனர்.
அத்துடன் சுற்றுலா வாகனங்களும் அதிக அளவில் இந்த மலைப்பாதை வழியாகவே கேரளாவுக்கு சென்று வருகின்றன. இவ்வாறு வந்து செல்லும் வாகனங்களை சோதனையிடுவதற்காக தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில் இருமாநில போலீஸ் மற்றும் வனத்துறை சார்பில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கம்பம்மெட்டு எல்லையில் தமிழக வனத்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கம்பம்மெட்டு பகுதியில் போலீஸ் சார்பில் சோதனைச்சாவடி இல்லை. இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் இருமாநிலங்களுக்கு இடையே எல்லைப்பிரச்சினை ஏற்பட்டதையடுத்து கம்பம்மெட்டு பகுதியில் தமிழக போலீஸ் சார்பில் கடந்த ஆண்டு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த சோதனைச்சாவடியில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கம்பம்மெட்டு வழியாக கேரளாவுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சோதனைச்சாவடியில் சோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படும். ஆனால் இந்த சோதனைச்சாவடியில் போலீசாருக்கான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை.
சோதனைச்சாவடி தகரத்தால் ஏற்படுத்தப்பட்டதாகும். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சோதனைச்சாவடிக்குள் போலீசாரால் வேலை செய்ய முடியவில்லை. சிரமத்துக்கு ஆளாகின்றனர். அத்துடன் இரவில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகம் உள்ளது. எனவே போலீசாரின் நலனை கருத்தில் கொண்டு சோதனைச்சாவடியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story