ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் அனைத்தையும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு


ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் அனைத்தையும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 17 Feb 2019 4:15 AM IST (Updated: 17 Feb 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே உள்ள பல்லவராயன்பட்டியில் வருகிற 24-ந்தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் அனைத்தையும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.

தேனி,

சின்னமனூர் அருகே பல்லவராயன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி, முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-

ஜல்லிக்கட்டை, காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணிக்குள் நடத்த வேண்டும். கால்நடைத்துறையின் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஒப்புதல் அளிக்கப்படும் காளைகளை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தும் அமைப்பினர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் உடற்திறன் குறித்து கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர்களிடம் சான்று பெற வேண்டும். போதை மருந்துகள், வெறியூட்டும் பொருட்கள் எந்த வடிவத்திலும் தரக்கூடாது. அரங்குக்கு வருவதற்கு முன்பாக காளைகளுக்கு 20 நிமிடம் ஓய்வு அளிக்க வேண்டும். ஒவ்வொரு காளைகளுக்கும் குறைந்தபட்சம் 60 அடி இடம் ஒதுக்க வேண்டும். காளைகளுக்கு போதிய உணவு, தண்ணீர் வசதி அளித்து அவை இயல்பான உடலியல் செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அனைத்து நிகழ்வுகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிவு செய்ய வேண்டும். பார்வையாளர்கள் கேலரி உறுதித்தன்மையுடன் அமைத்து பொதுப்பணித்துறையிடம் இருந்து பாதுகாப்பு உறுதிச் சான்று பெற வேண்டும். மாடுபிடி வீரர்களுக்கு முழு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். மாடுபிடி வீரர்கள், காளைகள் காயம்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க தேவையான வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்தி நாதன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராமர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story