பல்வேறு இடங்களில் கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
புதுச்சேரி,
புதுச்சேரி கவர்னர் மாளிகை முன்பு 39 கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக புதுவையில் பல்வேறு இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி புதிய பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் எம்.என்.ஆர்.பாலன் (காங்கிரஸ்), சிவா (தி.மு.க.), புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் மற்றும் உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, உழவர்கரை தொகுதிகளை சேர்ந்த காங்கிரஸ்–தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி தொகுதியில் லாஸ்பேட்டை அய்யனார் கோவில் அருகே ஆப்பாட்டம் நடைபெற்றது. இதில் சட்டசபை துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, லாஸ்பேட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் அய்யப்பன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
ராஜ்பவன் தொகுதியில் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. தலைமையில் அஜந்தா சிக்னலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காமராஜர் தொகுதியில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் சாரம் அவ்வை திடல் நடந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல் நெட்டப்பாக்கத்தில் விஜயவேணி எம்.எல்.ஏ. தலைமையிலும், திருபுவனையில் வட்டார காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் தலைமையிலும், காலாப்பட்டில் வட்டார காங்கிரஸ் தலைவர் ராமலிங்கம் தலைமையிலும், மண்ணாடிப்பட்டு தொகுதி சார்பில் திருக்கனூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து எதிரில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியாங்குப்பம் பிரம்ம சதுக்கம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ராமு, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
புதுவையில் பல்வேறு இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
புதுச்சேரியில் கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக நேற்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் பலர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போலீசார் செய்வதறியாமல் திணறி தவித்தனர்.