பயனாளிகளை தேர்வு செய்வதில் குளறுபடி: பொதுமக்கள் ‘திடீர்’ சாலை மறியல்


பயனாளிகளை தேர்வு செய்வதில் குளறுபடி: பொதுமக்கள் ‘திடீர்’ சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Feb 2019 4:38 AM IST (Updated: 17 Feb 2019 4:38 AM IST)
t-max-icont-min-icon

தெங்கால் அருகே தமிழக அரசு வழங்கும் ரூ.2 ஆயிரத்துக்கான பயனாளிகளை தேர்வு செய்வதில் குளறுபடி இருப்பதாக கூறி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

சிப்காட்டை அடுத்த தெங்கால் பகுதியில் 350 குடும்பங்களுக்கு மேல் உள்ளனர். இதில் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் திட்டத்தின்கீழ் 110 பயனாளிகளின் குடும்பங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதில் குளறுபடிகள் உள்ளது. உண்மையான பயனாளிகள் முறைப்படி ஆய்வு, விசாரணை செய்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை 9.30 மணி அளவில் பொதுமக்கள் தெங்கால் - புளியங்கண்ணு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வாலாஜா ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாஜலம் மற்றும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து மனுக்கள் பெற்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

சுமார் 1½ மணி நேரம் நடைபெற்ற இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story