வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்


வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 17 Feb 2019 4:56 AM IST (Updated: 17 Feb 2019 4:56 AM IST)
t-max-icont-min-icon

வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

சிப்காட்(ராணிப்பேட்டை),

காட்பாடி அருகே வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் ஆன்மிக சொற்பொழிவுகளும், சிறப்பு அபிஷேக நிகழ்ச்சிகளும், இரவு வாகனத்தில் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பிரம்மோற்சவ தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முதல் நாள் தேரோட்ட நிகழ்ச்சி, நேற்று மாலை தொடங்கியது. பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட தேரில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் எம்.எல்.ஏ., ஆர்.காந்தி எம்.எல்.ஏ., இந்து சமயஅறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார், சோளிங்கர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், மேல்பாடி கூட்டுறவு சங்க தலைவருமான சோமநாதபுரம் சின்னதுரை, தொழிலதிபர் தேன்பள்ளி நாகராஜ், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு தலைவர் குப்பத்தாமோட்டூர் ஆனந்தன், யானை வாகன உற்சவர் கமிட்டி பொருளாளர் கவுதமன், செயலாளர் கார்த்திகேயன், கோவில் செயல் அலுவலர் த.நிர்மலா, மேலாளர் நித்தியானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

அப்போது கூடியிருந்த பக்தர்கள் வள்ளிமலை முருகனுக்கு அரோகரா, வள்ளி மணாளனுக்கு அரோகரா என பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பினர்.

நிகழ்ச்சியில் உற்சவ குழுவினர், கோவில் விழா குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்து மலை சுற்று பாதையில் உள்ள துண்டுகரை என்ற இடத்தில் தேரை நிறுத்தினர். இரவு துண்டுகரையில் நிறுத்தப்பட்ட தேருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) துண்டுகரையில் இருந்து தேர் புறப்படுகிறது. தொடர்ந்து மலையை சுற்றி வந்து வருகிற 19-ந் தேதி தேர் நிலைக்கு வந்து சேருகிறது. பின்னர் 20-ந் தேதி காலை வேடற்பரி உற்சவ நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து வள்ளி- சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, பல்வேறு சமுதாய மரபினர், திருவிழா உற்சவ குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


Next Story