108 ஆம்புலன்ஸ் வாகனம் மீதான வன்முறை தடுப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்


108 ஆம்புலன்ஸ் வாகனம் மீதான வன்முறை தடுப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 Feb 2019 4:30 AM IST (Updated: 17 Feb 2019 10:18 PM IST)
t-max-icont-min-icon

108 ஆம்புலன்ஸ் வாகனம் மீதான வன்முறை தடுப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சியை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 45 இயக்கப்படுகிறது. அவசர கால சேவையில் ஈடுபடும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மீதும், ஊழியர்கள் மீதும் அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு வன்முறை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரியில் நடந்தது.

இதற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கி, விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார். இந்நிகழ்ச்சியில், நலப்பணிகள் இணை இயக்குனர் அசோக்குமார், துணை இயக்குனர் பிரியாராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் மாவட்ட அலுவலர் ராமன் கூறியதாவது:-

108 ஆம்புலன்ஸ் வாகனம் மீதும், ஊழியர்கள் மீதும் சிலர் தாக்குதல் நடத்துவதால், பொதுமக்கள் சேவை பாதிக்கப்படுகிறது. இதற்காக வன்முறை மற்றும் உடைமை சேதார தடுப்பு சட்டம் 2008 கீழ் அரசு அவசர கால ஊர்தியின் மீதோ அல்லது பணியாளர்கள் மீதோ வன்முறையில் ஈடுபட்டால், ஜாமீனில் வெளிவர இயலாத பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படுவதோடு, சொத்திற்கு ஏற்படும் சேதாரங்களுக்கான தொகையும் நீதிமன்றத்தின் மூலமாக செலுத்த வேண்டும்.

இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 108 ஆம்புலன்ஸ் வாகனங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story